உலகின் உயரமான எவரேஸ்ட் சிகரத்தை விட DNA பலவழிகளில் வலிமையானது. எவரேஸ்ட் தோன்றி வெறும் 2 கோடி ஆண்டுகள் மட்டுமேயாகிறது. ஒரு வலிமையான பூகம்பத்தால் இந்த சிகரம் எந்நேரமும் அழிக்கப்படலாம். மேலும் பூமியின் மையவிலக்கு விசையினால் (Centrifugal Force) இந்த சிகரம் மேற்கொண்டு வளரவும் வாய்ப்பில்லை. ஆனால் இந்த DNA நாளுக்கு நாள் மென்மேலும் வலுவடைந்து கொண்டேதானிருக்கிறது. அதனால் இமயத்தை விட ஆன்மாவான DNA வலிமை மிக்கது எனலாம்.
DNAவின் இத்தகைய வலிமைக்கு செல் பிரிதலிலுள்ள தலைசிறந்த கட்டுப்பாட்டுகளும் சட்டதிட்டங்களும்தான். ஆம், கட்டுப்பாட்டுகள் மற்றும் சட்டதிட்டங்களின்களின் படியே இந்த செல் பிரிதல் நடக்கிறது; நம் செல்களும் இயங்குகின்றன.
இந்த செல்களின் இயக்கங்களே நம் இயக்கம். கடந்த நாற்பது ஆண்டு காலமாக ஆராய்ச்சியாளர்களின் கடின உழைப்பால் செல்களில் உள்ள சட்டதிட்டங்கள் பல கண்டறியப்பட்டுள்ளன.
பல வேதிப்பொருட்கள் நம் DNA வை உடைத்தெறியும் சக்தியைப் பெற்றுள்ளன. அவைகளில் உணவில் பயன்படுத்தும் சாயப்பொருட்களும், மாசடைந்த நீரில் உள்ள பல வேதிப்பொருட்களும், வாகனங்களின் மற்றும் பல தொழிற்சாலைகளின் புகையில் உள்ள வேதிப்பொருட்களும் அடக்கம். மேலும் சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள் மற்றும் ஏனைய கதிர்வீச்சுகளும் DNA வை சேதமடையச் செய்யும் சக்தி படைத்தவை. நன்றாக வயிறு புடைக்கச் சாப்பிட்டுவிட்டு போதிய உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையால் இவ்வகையான பல நச்சுப்பொருட்கள் தானாகவே நம் உடலில் உருவாகின்றன. இவையும் DNA வை அப்பளமாக நொறுக்கும் சக்தி படைத்தது.
தண்டவாளம் இரண்டு நெடிய நீளக் கம்பிகளால் ஆனது போல் இந்த DNAவும் இரண்டு நெடுநீள இழைகளால் ஆனதுதான். தண்டவாளத்தில் ஒரு ரயில் மணிக்கு 140 கி.மீ வேகத்தில் செல்வதாக நினைத்துக்கொள்ளுங்கள். அப்போது தண்டவாளத்தில் ஒரு இடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது என வைத்துக்கொள்வோம். இதனை ரயிலை இயக்குபவருக்கு ஏதாவது ஒருவழியில் தெரிந்தால் ரயிலை நிறுத்திவிடுவார். எல்லோரும் தப்பித்துக் கொள்ளலாம். பின்னர், பொறியாளர்கள் விரைவாக வரவழைக்கப்படுவார்கள், அவர்கள் தண்டவாளத்தில் உள்ள விரிசலைச் சரி செய்வார்கள். இரயில் பயணம் சில மணிநேரம் தாமதமாகும் அவ்வளவுதான்.
நீடித்த இளமையை நோக்கி முன்னேறும் அறிவியல்
இப்போது DNA வை ரயில் தண்டவாளமாகவும், வேகமாகச் சென்று கொண்டிருக்கும் ரயிலை அதிவேகமாகப் பிரிதலுக்குப் பயணிக்கும் ஒரு செல்லாகவும் நினைத்துக் கொள்ளுங்கள். ரயில் தண்டவாளம் உடைந்தது போல், DNA உடைந்தால் செல்பிரிதல் என்ற பயணம் நிறுத்தப்படவேண்டும். காரணம் DNA தான் நம் உடல் கட்டமைப்பு மற்றும் அனைத்து இயக்கங்களின் தகவல்களைத் தாங்கியுள்ள திட்ட வரைபடமாகும் (Blue print). RNA, புரதம், மாவு மற்றும் கொழுப்புப் பொருட்கள் சேதமடைந்தால் பெரிதாக ஒன்றும் பிரச்னை வந்துவிடாது. காரணம் இவற்றைத் தயாரிக்கும் செய்முறைக் குறிப்பு DNAல் உள்ளது. அதனால் DNA ல் உள்ள செய்முறை குறிப்பின் அடிப்படையில் நம் செல்கள் அவைகளை எளிதில் தயாரித்துக் கொள்ளும். ஆனால் இந்த DNA பாதிக்கப்பட்டால் இந்த தகவல்கள் மாற்றி அமைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. இந்த தகவல் மாற்றத்தை திடீர் மாற்றம் (Mutation) என அழைக்கப்படுகிறது. “போய் படி” என்ற வாக்கியம் “போய் கடி” என்று மாற்றி எழுதுவது மாதிரி தவறுதலான கட்டளை DNA வில் பதிவாகிவிடும். செல்லில் அந்தக் கட்டளை அப்படியே நிறைவேற்றப்படும். அதாவது தவறான RNA, புரதம், மாவு மற்றும் கொழுப்புப் பொருட்கள் தயாரிக்கப்படும்!.
இந்த மாற்றங்கள் ஆறுக்குமேல் ஒரு செல்லில் ஏற்பட்டால் அது புற்றுநோய் செல்லாக மாற்றமடையும்! மாற்றமடைந்த இந்த செல்கள் உடலில் இருக்கும் பெரும்பாலான சட்ட திட்டத்திற்குக் கீழ்ப்படியாது. தன்போக்கில் செயல்படும். இருக்கிற உணவை இதுவே அபகரித்துக் கொள்ளும். அதனால் அதிவேகமாக வளரும். இதனால் அருகில் உள்ள மற்ற செல்களையும் இயங்கவிடாது!
இந்த நிலையில் நம் உடலில் DNA உடைந்தால் இதனைக் கண்டறியப் பல புரதங்கள் (DNA damage Sensors) உள்ளன. இவை DNA உடைப்பு அல்லது ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் உடனே செல்பிரிதல் பயணத்தை நிறுத்தும் புரதக் கூட்டத்திற்கு தகவலனுப்பும். அவசர அவசரமாக இவைகள் செல்பிரிதல் பயணத்தை நிறுத்தும்.
Discussion about this post