சென்னை:
சென்னையில் நேற்று ஆளுநர் ஆர். என் ரவி கொடுத்த தேநீர் விருந்தை எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு அதிமுகவினர் புறக்கணித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பொதுவாக குடியரசுத் தினம், சுதந்திர தினத்தில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து தரப்படும். இது வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறைதான்.ஆளுநர் மூலம் அளிக்கப்படும் இந்த நிகழ்விற்கு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட , சட்டசபையில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். அந்த வகையில் கடந்த குடியரசுத் தினத்தின் போது நடத்தப்பட்ட தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். திமுகவினர் இதில் கலந்து கொள்ளவில்லை.
கடந்த முறை ஆளும் திமுகவுக்கும் – ஆளுநர் ரவி தரப்பிற்கும் கடும் மோதல் நிலவி வந்தது.
முக்கியமாக கடந்த முறை ஆளுநர் ஆர். என் ரவி நீட் விலக்கு மசோதாவை ஏற்காமல் இருந்தார். இதை அவர் டெல்லிக்கு அனுப்பாமல் இருந்தார். இதற்கு ஆளும் திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதன் காரணமாக ஆளும் திமுக அப்போது அவரின் தேநீர் விருந்தை புறக்கணித்தது. தற்போது நீட் விலக்கு மசோதா டெல்லிக்கு சென்றுவிட்டது. இதன் காரணமாக ஆளுநர் ரவியின் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிக்கவில்லை.
நேற்று நடந்த தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மெய்யநாதன், அனிதா ராதா கிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு அதிமுகவினர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டனர். ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
என்ன நடந்தது?
இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதுதான் பெரிய சர்ச்சையாகி உள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் 2 பேர் வருவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இவர்களுக்கான இருக்கை முன் பக்கம் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் கூட எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் இந்த நிகழ்விற்கு வரவில்லை. தனது சார்பாக கூட யாரையும் எடப்பாடி பழனிசாமி அனுப்பி வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்?
இதற்கு பின் இரண்டு விஷயங்கள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. காரணம் – எடப்பாடி – பாஜக இடையே நிலவும் மோதல். இரண்டு தரப்பிற்கும் இடையில் தற்போது லேசான கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஒற்றை தலைமை விவகாரத்தை பாஜக ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக எடப்பாடி அப்செட்டில் உள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் டெல்லியிலும், சென்னையிலும் எடப்பாடியை மோடி தனியாக சந்திக்க மறுத்ததும் கூட குறிப்பிடத்தக்கது.
இதனால் எடப்பாடி தேநீர் விருந்தை புறக்கணித்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது போக இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. தேநீர் விருந்துக்கு முதல்வர் ஸ்டாலின் வந்தார், அதேபோல் ஓ பன்னீர்செல்வமும் வந்தார். இவர்களை நேரில் பார்க்க கூடாது என்பதால் எடப்பாடி பழனிசாமி இந்த நிகழ்வை புறக்கணித்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அப்படியே இருந்தால் தனது சார்பாக ஒருவரை கூட எடப்பாடி பழனிசாமி அனுப்பி வைக்காதது ஏன் என்று கேள்வியை இது எழுப்பி உள்ளது.
Discussion about this post