சென்னை:
விண்வெளியில் இருக்கும் இளமையான கிரகம் ஒன்றை நாசா உள்ளிட்ட பல்வேறு நாட்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த இளமையான கிரகம் காரணமாக விண்வெளியில் “பிரசவம்” ஒன்று நடக்க போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பிரபஞ்சத்தின் தொடக்கத்தை ஆராய்வதற்காக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பப்பட்டுள்ளது. சமீபத்தில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த சில விண்வெளி புகைப்படங்களை நாசா வெளியிட்டது. முக்கியமாக நாசா மூலம் SMACS 0723 பிரபஞ்ச தொகுப்பு புகைப்படம் வெளியிடப்பட்டது.
என்ன நடக்கும்?
இந்த நிலையில்தான் விண்வெளியில் இளமையான கிரகம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியில் இருந்து 395 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த கிரகம் உள்ளது. இதை ஏ.எஸ் 209 என்று அழைக்கின்றனர். பூமியுடன் ஒப்பிடும் போது இது மிக மிக வயது குறைந்த இளமையான கிரகம் ஆகும். இதன் வயது வெறும் 1.5 மில்லியன் வருடம் மட்டுமே இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பிரசவம்!
பொதுவாக கிரகங்களுக்கு 1.5 மில்லியன் வருடம் என்பது மிக மிக குறைவான வயது ஆகும். இந்த கிரகம் வயது குறைவாக இருப்பதால் இதன் வளிமண்டலத்திற்கு வெளியே இனிதான் புதிய நிலாக்கள் தோன்றும் என்று புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஜெஹான் பே தெரிவித்துள்ளார். இதை சுற்றி பல அடுக்கு காற்றுக்கள் உள்ளன. இவை தூசிகளால் நிரம்பி உள்ளன. அதேபோல் பெரிய பாறைகள் இதை சுற்றி வருகின்றன.
பாறைகள் :
இவை வருங்காலத்தில் அந்த கிரகத்தை சுற்றி புதிய நிலாக்களை உருவாக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதாவது இந்த வாயுக்கள், பாறைகள் காரணமாக புதிய நிலாக்கள் அந்த கிரகத்தை சுற்றி பிறக்க வாய்ப்பு உள்ளது. விண்வெளியில் நடக்க போகும் பிரசவம் போல இது இருக்கும் என்று புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஜெஹான் பே தெரிவித்துள்ளார். புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பலர் இந்த கிரகத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.
ஏன் முக்கியம்?
அதேபோல் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலமும் இந்த ஏ.எஸ் 209 கிரகத்தை ஆய்வு செய்யலாம் என்று முடிவு எடுத்துள்ளனர். இந்த கிரகத்தை ஆய்வு செய்வதன் மூலம் புதிய கிரகங்கள் எப்படி உருவாகிறது. தொடக்க காலத்தில் கிரகங்கள் எப்படி செயல்படும். நிலாக்கள் எப்படி உருவாகும் என்பதை அறிந்து கொள்ள முடியும். அதோடு மனித குலம் இதை முதல் முறையாக காணப்போகிறது. இதுவரை நாம் நிலாக்கள் பிறப்பதை தொலைநோக்கிகள் மூலம் பார்த்தது இல்லை. நமது பூமி தொடக்க காலத்தில் எப்படி இருந்தது. நமது பூமியின் நிலவு உருவானது எப்படி என்பதையும் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post