சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில், மூத்த தலைவர்களான தம்பிதுரை, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக தெரிகிறது.
முதலில் பேசிய எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அறிய தமிழகமே காத்திருப்பதாக கூறியதாக தெரிகிறது. அப்போது, தங்கமணி, செம்மலை, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் ஆகியோர் இபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், தற்போது முதலமைச்சரை மாற்றி அறிவித்தால், நமது வேட்பாளர் சரியில்லை என நாமே கூறியதுபோல இருக்கும் என நத்தம் விஸ்வநாதன் சொன்னதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது குறுக்கிட்ட ஓ.பி.எஸ்., தன்னை தனிமைப்படுத்துவதற்காகவே இந்த கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாக கூறியதோடு, இந்த அரசுக்கு மட்டுமே துணை முதலமைச்சராக இருக்க சம்மதித்தேன் என்றும் சொன்னதாகத் தெரிகிறது.
2021-இல் தன்னை முதலமைச்சர் வேட்பாளர் என்று சொன்னதால்தான் இணைப்பிற்கு ஒப்புக்கொண்டேன் என ஓ.பி.எஸ். சொன்னதாகவும் கூறப்படுகிறது. அப்போது 2021-இல் உங்களை முதலமைச்சராக்குவோம் என நாங்கள் கூறவில்லை என அமைச்சர் தங்கமணி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, என்னையும், உங்களைவும் முதல்வராக்கியது சசிகலாதான் என எடப்பாடி பழனிசாமி சொன்னதாகவும், அப்போது என்னை முதலமைச்சராக்கியது ஜெயலலிதா, உங்களை முதல்வராக்கியது சசிகலா என ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமாக கூறியதாகவும் தெரிகிறது.
Discussion about this post