பொதுப்பெட்டியில் பயணம் செய்வது கஷ்டம் என்று கூறி அந்த டிக்கெட் பரிசோதகர் பெண்ணுக்கு ஏசி முதல் வகுப்பு பெட்டியில் இருக்கைக்கு ஏற்பாடு செய்து தந்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் தனது 2 வயது மகனுடன் ஜனவரி 16ஆம் தேதி டேராடூன்-பிரயாக்ராஜ் லிங்க் விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார். இவர் பொதுப் பெட்டியில் பயணம் செய்துவந்த நிலையில், இந்த பெண்ணுக்கு தெரிந்த டிக்கெட் பரிசோதகர் ராஜூ சிங் அந்த ரயிலில் பணியில் இருந்துள்ளார். குழந்தையுடன் பொதுப்பெட்டியில் பயணம் செய்வது கஷ்டம் என்று கூறி அந்த டிக்கெட் பரிசோதகர் பெண்ணுக்கு ஏசி முதல் வகுப்பு பெட்டியில் இருக்கைக்கு ஏற்பாடு செய்து தந்துள்ளார்.
தொடர்ந்து அந்த பெண் ஏசி பெட்டியில் பயணம் செய்த நிலையில், இரவு 10 மணி அளவில் டிக்கெட் பரிசோதகர் ராஜூ சிங் குடிநீர் பாட்டில் கொடுத்து நீர் அருந்த வைத்துக்கொள் என்றுள்ளார். அந்த குடிநீரில் மயக்க மருந்து கலக்கப்பட்டிருந்த நிலையில், அதை குடித்த பெண் மயக்க நிலைக்கு சென்றார். அதன் பின்னர் டிக்கெட் பரிசோதகர் ராஜூ சிங் மற்றொரு நபருடன் சேர்ந்து பெண்ணை ரயில் பெட்டியில் வைத்தே கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
பெண் மயக்க நிலையில் இருந்ததால் அவரால் ஏதும் செய்ய முடியவில்லை என்று வாக்குமூலம் தந்துள்ளார். மயக்கம் தெளிந்ததும் தனக்கு நேர்ந்த கொடுமையை உணர்ந்த பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் டிக்கெட் பரிசோதகர் ராஜூ சிங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதேவேளை, மற்றொரு நபரை பெண்ணால் அடையாளம் காண முடியவில்லை. அந்த நபரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து டெல்லி செல்லும் சத்பாவனா விரைவு ரயிலில் 27 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரயில்வே ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அடுத்த சில நாள்களிலேயே ரயிலில் மற்றொரு பாலியல் குற்றச்சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post