செய்வதறியாது தவித்த அந்த நபர் வேறு வழியில்லாமல் விஜயவாடா வரை பயணம் செய்தார்.
இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலை பலரும் ஆர்வமுடம் பார்த்துச் செல்கின்றனர். அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் செய்கின்றனர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் ராஜ மகேந்திரவரம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலில் உள்ள வசதிகளை படம் எடுப்பதற்காக நடுத்தர வயதுள்ள ஒரு நபர் ஏறினார். ரயிலில் ஏறிய சில நொடிகளில் கதவு அடைக்கப்பட்டு ரயில் புறப்பட்டு விட்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அவர் ரயில் டிக்கெட் பரிசோதகரிடம் சென்று கதவை திறந்து தன்னை இறக்கி விடுங்கள் என்று கேட்டார்.
ஆனால் இந்த ரயிலில் அதுபோல் செய்ய இயலாது, அது தானியங்கி கதவுகள்.. ரயில் அடுத்து எந்த நிலையத்தில் நிற்கிறதோ அங்குதான் இறங்க வேண்டும் என்று கைவிரித்துவிட்டார். ரயில் அடுத்து விஜயவாடாவில்தான் நிற்கும், பயணச் சீட்டு இல்லாமல் ரயில் ஏறிய காரணத்திற்காக நீங்கள் டிக்கெட் தொகையுடன் அபராதத்தையும் செலுத்த வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியுள்ளார் மற்றொரு ரயில்வே ஊழியர்.
இதனால் அதிர்ச்சிடைந்த அந்த நபர் டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் அவரோ கறாராக ரயில்வே சட்டப்படி உங்கள் வாக்குவாதம் எடுபடாது. எனவே நீங்கள் விஜயவாடா வரை பயணம் செய்தே ஆக வேண்டும். இடையில் ரயில் நிற்காதும், கதவையும் நான் திறக்க இயலாது. கதவின் முழுக் கட்டுப்பாடு அனைத்தும் ரயில் டிரைவரிடம் இருக்கும் என்று கூறிவிட்டார்.
செய்வதறியாது தவித்த அந்த நபர் வேறு வழியில்லாமல் விஜயவாடா வரை சுமார் 159 கி.மீ பயணம் செய்தார். தெரியாமல் நடந்த அந்த தவறுக்காக அந்த நபரை ரயில்வே அதிகாரிகள் எச்சரித்து ரயிலில் இருந்து இறங்கி செல்ல அனுமதித்தனர்.
Discussion about this post