பிரபல சிக்கன் நிறுவனத்தின் டீலர்ஷிப் பெற்று சிக்கன் கடை நடத்த லைசென்ஸ் பெறுவதற்காக ஆன்லைனில் தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் கைவரிசை.
சிக்கன் கடைக்கு லைசென்ஸ் பெற்றுத்தருவதாக கூறி ஆன்லைன் மூலம் ரூ.8.5 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த மர்ம நபர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள காரைக்குறிச்சி புதூரை சேர்ந்தவர் ராஜேஷ் (33) லாரி உரிமையாளர். இவர் பிரபல சிக்கன் நிறுவனத்தின் டீலர்ஷிப் பெற்று சிக்கன் கடை நடத்த, லைசென்ஸ் பெறுவதற்காக, ஆன்லைனில் அதற்கான விவரங்களை தேடி வந்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் ராஜேஷிடம் செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளனர்.
அப்போது பிரபல சிக்கன் கம்பெனியின் லைசென்ஸ் பெறுவதற்காக முதற்கட்டமாக ராஜேஷிடம் ரூ.1.50 லட்சம் கேட்டுள்ளனர். ராஜேஷ் அந்த பணத்தை வங்கி கணக்கு மூலம் அனுப்பியுள்ளார். பின்னர் உங்களுக்கு சிக்கன் கடைக்கு ஆர்டர் கிடைத்து விட்டது, ஸ்டால் அமைத்து கொடுக்க மேலும் ரூ.7 லட்சம் அனுப்புங்கள் என்று கூறியுள்ளனர். அந்த பணத்தையும் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். மொத்தம் ரூ. 8.50 லட்சத்தை மர்ம நபர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு அனுப்பி பல நாட்களாகியும் சிக்கன் கடை லைசென்ஸ் வரவில்லை என பயத்துடன் ராஜேஷ் இருந்துள்ளார்.
அப்போது அந்த மர்ம நபர்கள், லைசென்ஸ் பெறவும், சிக்கன் லோடு அனுப்பவும், மேலும் ரூ.15 லட்சம் தர வேண்டும் என கேட்டு உள்ளனர்.இதனால், சந்தேகம் அடைந்த ராஜேஷ் குறிப்பிட்ட அந்த சிக்கன் நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். அப்போது தான் ஏமாற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து ராஜேஷ் நாமக்கல் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post