நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே மோதல் வெடித்தது. பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் உரையின் போது தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்ற சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தார். இது அவையில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.
அந்த தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வாசித்துக் கொண்டிருக்கும் போதே, ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து வெளியேறினார். தமிழ்நாடு அரசின் உரையை முழுமையாக படிக்காதது, பேரவையில் தேசிய கீதம் இசைக்கும் முன்பாகவே ஆளுநர் வெளியேறியது உள்ளிட்ட விவகாரங்களை அவை விதிமீறல்களாக திமுக கையில் எடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டிஆர் பாலு, எம்பிக்கள் ஆ. ராசா, என்.ஆர் இளங்கோ, வில்சன் ஆகியோர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தனர். அவரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்து அனுப்பிய மனுவை தந்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி டிஆர் பாலு கூறுகையில், “ஆளுநர் தனது உரையில் சில வார்த்தைகளை சேர்த்தும் சில வார்த்தைகளை தவிர்த்ததும் மரபை மீறிய செயல் என்று நாங்கள் கூறுகிறோம். மேலும், அவர் அவை மரபை மீறி தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே அவையில் இருந்து வெளியேறினார். இது தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தமிழ்நாட்டு மக்களையும் அவமதிக்கும் செயல்.
எனவே, இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த சீலிடப்பட்ட மனுவை நாங்கள் கொடுத்துள்ளோம்.இது முதலமைச்சர் குடியரசுத் தலைவருக்கு எழுதிய சீல் வைக்கப்பட்ட மனு, அதன் முழு உள்ளடக்கம் தெரியாது. அதன்படி மனுவை படித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளோம். அனைத்தையும் கவனமுடன் கேட்டு பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக (I Will see) குடியரசு தலைவர் கூறியுள்ளார்” என டி.ஆர் பாலு தெரிவித்தார்.
பின்னர் செய்து சமுத்திர திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த பாலு, “மத்திய அமைச்சர் ஜிதெந்திர சிங் நாடாளுமன்றத்தில் வழங்கிய பதில் அடிப்படையில் சேது சமுத்திரத் திட்டம் நிச்சயமாக நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். நாடாளுமன்றத்திலும் இதுகுறித்து வலியுறுத்தப்படும். திட்டம் நிறைவேறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்” எனத் தெரிவித்தார்.
Discussion about this post