சென்னை போரூரை சேர்ந்த 22 வயதான ஷோபனா கூடுவாஞ்சேரியிலுள்ள தனியார் நிறுவனமான Zoho-வில் சாப்ட்வேர் எஞ்சினீயராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் 12ம் வகுப்பு படிக்கும் தனது தம்பியை திருவேற்காட்டிலுள்ள பள்ளியில் விடுவதற்காக நேற்று இரு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். தாம்பரம் பைபாஸ் சர்வீஸ் சாலையில் மதுரவாயல் அருகே சென்றுகொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அந்த சமயத்தில் பின்னால் மணல் ஏற்றிவந்த லாரி ஒன்று ஷோபனா மீது ஏறி இறங்கியது. கண் முடி திறக்கும் முன்பு நடந்த இந்த கொடிய விபத்தில் ஷோபனா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நல்வாய்ப்பாக அவரது தம்பி உயிர் தப்பினார்.
விபத்து குறித்த தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஷோபனாவின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தார். பள்ளிக்கு தாமதமாகிவிட்டது என்பதற்காக தம்பியை அழைத்துச் சென்ற பொறியாளர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக Zoho நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, “எங்கள் பொறியாளர்களில் ஒருவரான ஷோபனா இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது சென்னை மதுரவாயல் அருகே குண்டும் குழியுமான சாலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். நமது மோசமான சாலையால் ஷோபனாவை அவரது குடும்பமும் Zoho நிறுவனமும் இழந்துவிட்டது” என்று ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Discussion about this post