வைட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்து ஆகிய பெயர்களை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நம் உடலில் ரத்த உற்பத்திக்கும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் மிகவும் அவசியமான ஊட்டச்சத்துகள் இவைதான். ரத்தப் பற்றாக்குறையால் ஏற்படும் பல விதமான நோய்களை தடுப்பதற்கு இந்த ஊட்டச்சத்துகள் உதவிகரமாக இருக்கின்றன.
நம் உடலின் பல உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொள்கின்ற ஹீமோகுளோபினில் இரும்புச்சத்து தான் முக்கியமாக இடம்பெற்றுள்ளது. இரும்புச்சத்து பற்றாக்குறை பொதுவாக எல்லோருக்கும் வரக் கூடியது என்றாலும் பெண்களைத் தான் இது முதன்மையாக பாதிக்கிறது.
ரத்த சோகை ஏற்படுவது எப்படி.?
நமக்கு ஏற்படும் பல வகையான ஊட்டச்சத்து பற்றாக்குறைகளில் எளிதில் தீர்வு காணக் கூடியது இரும்புச்சத்து பற்றாக்குறை தான். உடலில் அதிகப்படியான ரத்த இழப்பு அல்லது ரத்தத்தில் இரும்புச்சத்து பற்றாக்குறை போன்ற காரணங்களால் ரத்த சோகை ஏற்படுகிறது. இதன் காரணமாக மிகுந்த உடல் சோர்வு ஏற்படும். இயல்பான வேலைகளைக் கூட உங்களால் செய்ய இயலாது. உடலில் ஹீமோகுளோபின் உற்பத்தி ஆக வேண்டும் என்றால் இரும்புச்சத்து அவசியமானதாகும்.
மன அழுத்தம் மற்றும் மினரல் பற்றாக்குறை
இரும்புச்சத்து பற்றாக்குறை காரணமாக நமக்கு மன அழுத்தம் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. செரோடினின் அளவுகள் குறையும்போது நம் எண்ண ஓட்டங்களில் மாறுபாடு ஏற்படுகிறது. இந்த அளவுகள் குறைவதற்கு காரணமே இரும்புச்சத்து பற்றாக்குறை தான். உடலில் விட்டமின் பி12 பற்றாக்குறை ஏற்படும்போது தசை பலவீனம், உடல் சோர்வு, மனச்சோர்வு, பதற்றம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்
.
விட்டமின் பி12 பற்றாக்குறையை அறிவது எப்படி?
நம் உடலில் தேவையான அளவு ரத்தம் இருந்தாலும் கூட இந்த பி12 பற்றாக்குறை ஏற்படக் கூடும். ஆகவே, இதன் அறிகுறிகளை கண்டறிவது கடினம். வயது அதிகரிப்பது, கர்ப்பம், நீண்டகால நோய்கள், குறிப்பிட்ட மருந்துகளை பயன்படுத்துவது போன்ற காரணங்களால் பி12 பற்றாக்குறை ஏற்படும்.
இரும்புச்சத்து பற்றாக்குறை காரணமாக கவலை
மூளையின் செயல்பாடு, உளவியல் ரீதியிலான செயல்பாடுகள் போன்றவற்றுக்கு இரும்புச்சத்து அவசியமானதாகும். அந்த வகையில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால் உங்களுக்கு கவலை மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் உண்டாகும். கவலை உணர்வு அதிகரிப்பது ரத்த சோகைக்கான அறிகுறியாகும்.
பி12 மற்றும் இரும்புச் சத்து உணவுகள்
ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலமாக பி12 மற்றும் இரும்புச் சத்து பற்றாக்குறையை போக்க முடியும். பச்சை காய்கறிகள், நட்ஸ், தானியங்களை எடுத்துக் கொண்டால் பி12 பற்றாக்குறை குறையும். அதேபோல மீன், இறைச்சி, முட்டை மற்றும் பால் சார்ந்த பொருட்களை எடுத்துக் கொள்ளலாம். கருப்பட்டி, வெல்லம், பேரீட்சை போன்றவற்றில் இரும்புச்சத்து மிகுதியாக உள்ளது.
Discussion about this post