கொள்ளை சம்பவம் குறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் கணேஷ் பாபு புகாரளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை
மாம்பலத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பாபு. நேற்று இரவு, இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 7 சவரன் தங்க நகை, ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பினர். இதுகுறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் கணேஷ் பாபு புகாரளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில், எழும்பூர் ரயில் நிலையத்தில் மதுபோதையில் 2 பேர் படுத்து தூங்கிகொண்டிருந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த உடமைகளை சோதனை செய்தபோது அதில், 7 சவரன் நகை, ரூ.50 ஆயிரம் பணம் இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த ரயில்வே போலீசார் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தியபோது பிடிபட்டவர்கள் அம்பத்தூர் அருகே மன்னணூர் பேட்டையைச் சேர்ந்த பெயிண்டர் சையது அப்துல் கரீம் (37). அவரது நண்பர் ஆட்டோ ஓட்டுநர் பாடியைச் சேர்ந்த குமார் (29) என்பது தெரியவந்தது.
இவர்கள் இருவரும் மாம்பலத்தில் கணேஷ்பாபு வீட்டில் கொள்ளையடித்து அந்த நகையுடன் மது மற்றும் கஞ்சா போதையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் படுத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரும் மாம்பலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் திருட்டு, கொள்ளை, வழிப்பறி ஆகிய வழக்கு பதிவுகள் நீலாங்கரை அம்பத்தூர், பட்டாபிராம், ஆவடி, நொளம்பூர், கொரட்டூர் ஆகிய காவல் நிலையங்களில் உள்ளது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post