பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்க பணம் பெறுவதற்கான டோக்கன்களை இன்றும் நாளையும் வீடுவீடாக விநியோகம் செய்ய ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த காலங்களில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு கரும்புடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு அரசு சார்பில் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இவை வழங்கப்பட உள்ளது.
பொங்கல் ரொக்கப் பணம் தமிழ்நாட்டில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. ரூ.1000 ரொக்கம் பெறுவதற்கான டோக்கன் இன்றும் நாளையும் விநியோகம் செய்ய ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரூ.1000 வழங்குவதை வருகின்ற ஜனவரி 2ம் தேதி சென்னையில் முதலமைச்சரும் மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post