பீகாரில் நிலத் தகராறில் ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 5 பெண்கள் காயம் அடைந்தனர். பீகார் மாநிலத்தில் உள்ள பெட்டியா பகுதியில் நக்டி பட்வாரா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இரு தரப்பு இடையே நில தகராறு 1985ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை நீடித்து வருகிறது.
இறுதி தீர்ப்பு வரும் வரை இந்த நிலத்தை இரு தரப்பும் பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஒரு தரப்பு சமீப காலமாக நிலத்தை உரிமை கொண்டாடி பயன்படுத்த தொடங்கியுள்ளது. இதை கவனித்த மற்றொரு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஷிஷிர் தூபே என்பவரின் தரப்பு சம்பந்தப்பட்ட நிலத்திற்குள் நுழைந்து டிராக்டர் வைத்து உழத் தொடங்கியுள்ளார்.
ஷிஷிர் தூபேவின் அத்துமீறலை எதிர்த்து மறுதரப்பை சேர்ந்த சில பெண்கள் நிலத்திற்கு வந்து வாக்குவாதம் செய்து போராடியுள்ளனர். இது தொடர்பாக இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஷிஷிர் தூபே எதிர்தரப்பை சேர்ந்த பெண்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இதில் சந்தா தேவி, பபிதா தேவி, ஷனிகா தேவி, மஞ்சு தேவி, அமிரிதா தேவி ஆகிய 5 பெண்கள் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவத்திற்கு தூண்டுதலாக இருந்த மற்ற நபர்களையும் காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். குற்றச்செயல்களில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது என காவல் கண்காணிப்பாளர் உபேந்திரநாத் வர்மா உறுதியளித்துள்ளார்.
Discussion about this post