லஞ்சப் புகார் தொடர்பாக, கோவையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா-வின் பினாமி நிறுவனத்துக்கு சொந்தமான 55 கோடி ரூபாய் மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டுவரை ஆ.ராசா பதவிவகித்தபோது, லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் குறித்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
இதில், குருகிராம் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதும், இதற்காக ஆ.ராசா-வின் பினாமி நிறுவனத்துக்கு பணம் வழங்கியதும் தெரியவந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தை தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பரின் பெயருக்கு 2007-ம் ஆண்டிலேயே ஆ.ராசா மாற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம், எந்தவொரு வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும், ரியல் எஸ்டேட் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட பணத்தின்மூலம், கோவை மாவட்டத்தில் நிலம் வாங்கியதும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, 55 கோடி ரூபாய் மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது.
Discussion about this post