சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
2022-23ம் ஆண்டிற்கான சென்னை மாவட்ட திருக்குறள் பரிசுத் தொகை போட்டி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் கீழ், 1330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் அனைத்து மாணவர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.10,000 பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
கடந்த 2000ம் ஆண்டு, கன்னியாகுமரியில் அமைந்துள்ள அய்யன் வள்ளுவன் சிலை திறப்பு விழாவின்போது, 1330 குறட்பாக்களை முற்றோதல் செய்யும் மாணவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், குறட்பாக்களை ஒப்புவிக்கும் மாணவர்கள் ஆண்டுதோறும் சிறப்பிக்கப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மாவட்ட மாணவர்களுக்கான திருக்குறள் பரிசுத் தொகை போட்டி குறித்த அறிவிப்பை தமிழ் வளர்ச்சி இயக்குனர் வெளியிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
1330 திருக்குறட்பாக்களையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
இயல் எண், பெயர், அதிகாரம் எண், பெயர், குறள் எண், பெயர் போன்றவற்றை தெரிவித்தால் அதற்குரிய திருக்குறளைக் கூறும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
திருக்குறளின் அடைமொழிகள், திருவள்ளுவரின் சிறப்புப்பெயர்கள், திருக்குறளின் சிறப்புகள் ஆகியவற்றை அறிந்தவராக இருத்தல் வேண்டும்.
சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளி (அரசு / அரசு உதவிபெறும் / தனியார் / பதின்மப் பள்ளிகள்) மற்றும் கல்லூரிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.
தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெறும் இப்பரிசினை இதற்கு முன்னர் பெற்றவராக இருத்தல் கூடாது.
திருக்குறளின் கருதப்பெறும் பொருளும் அறிந்திருப்பின் கூடுதல் தகுதியாகக் கருதப்பெறும்
தெரிவு முறை: தகுதியான மானவர்கள் திறனறி குழுவினர் மூலம் அரசுக்குப் பரிந்துரை செய்யப்படுவார்கள்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
2022-2023 ஆம் ஆண்டிற்கான திருக்குறள் ஒப்புவிக்கும் (முற்றோதல்) போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர்கள் தமிழ் வளர்ச்சித் துறையின் tamilvalarchithural.tn.gov.in என்ற வலைதள முகவரியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். நிறைவு செய்யப்பெற்ற விண்ணப்பங்களை எழும்பூர், தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 28190448, 044 28190412, 044 -28190413 என்ற தொலைபேசி எண்ணிகளில் தொடர்பு கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி: தமிழ் வளர்ச்சித் துணை இயக்குனர், சென்னை மாவட்டம், தமிழ் வளர்ச்சி வளாகம், முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-8 ஆகும்.
Discussion about this post