உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்ற நிலையில் மெஸ்ஸி குறித்து சேவாக் பதிவிட்டுள்ள கருத்து அனைவரது கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது.
கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான மெஸ்ஸிக்கு உலகக் கோப்பை கனவு நனவாகியுள்ளது . ஏழு முறை பாலன் டி ஆர் விருது எனக் கால்பந்தில் அனைத்து கோப்பைகளையும் வென்றுள்ள மெஸ்ஸிக்கு உலகக் கோப்பை என்பது எட்டாக்கனியாக இருந்துவந்தது. அதைத் தனது 35ஆவது வயதில் வென்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் மெஸ்ஸி.
இறுதிப்போட்டியில் 2 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மெஸ்ஸி இருந்தார் என்பதும் கூடுதல் சிறப்பு. மேலும், உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்ற ஒரே வீரர் என்ற மகத்தான சாதனையை மெஸ்ஸி படைத்தார். இதன் மூலம், கத்தார் உலகக் கோப்பையில் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து (Golden Ball) விருதையும் அவர் வென்றார். 2014-ஐ தொடர்ந்து இரண்டாவது முறை GOLDEN BALL விருதை முத்தமிட்டார் மெஸ்ஸி.
உலகக் கோப்பை வென்ற மெஸ்ஸிக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் சேவாக் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கும் கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. சேவாக் தனது பதிவில், ஒரு வேளை மெஸ்ஸி இந்தியாவில் பிறந்து இருந்தால் உடனடியாக இதான் நடந்திருக்கும் என மெஸ்ஸி காவல்துறை அதிகாரியாக இருக்கும் கிராஃபிக்ஸ் செய்யப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். விளையாட்டு வீரர்களுக்கு அரசு வழங்கும் கௌரவ பதவி குறித்து அவர் தனது பதிவில் வெளியிட்டுள்ளார்.
இதனிடையே வெற்றிக்குப் பின் ஊடகத்தினருக்கு பேட்டி அளித்த மெஸ்ஸி, “நான் உலக சாம்பியனாக மேலும் சில போட்டிகளை விளையாட விரும்புகிறேன். எனது விளையாட்டு கேரியரில் அனைத்து பட்டங்களையும் நான் வென்றுவிட்டேன். இதுவரை உலகக் கோப்பை மட்டுமே எட்டாக்கனியாக இருந்தது. தற்போது அதையும் நனவாக்கி, எனது நாட்டு மக்களுடன் அதை கொண்டாடவுள்ளேன்” என்றார். தான் தொடர்ந்து அணிக்காக விளையாடவுள்ளேன் என் மெஸ்ஸி கூறியதன் மூலம் அர்ஜெண்டினா ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி கொடுத்துள்ளார்.
Discussion about this post