ஒவ்வொரு வளர்ச்சி கருப்பை பெட்டிகளும் குழந்தையின் இதயத் துடிப்பு, வெப்பநிலை, இரத்த அழுத்தம், சுவாச வீதம் மற்றும் ஆக்ஸிஜன் செறிவு உள்ளிட்ட முக்கிய அறிகுறிகளைக் கண்காணிக்கக்கூடிய சென்சார்களைக் கொண்டுள்ளன.
உலக சுகாதார அமைப்பு (WHO) சுமார் 300,000 இறப்புகள் கர்ப்ப சிக்கல்களால் ஏற்படுவதாக தெரிவிக்கிறது. இன்றைய சமூக சூழலில் ஊருக்கு ஒரு கருத்தரிப்பு மையம் வந்துவிட்டது. தம்பதிகளின் கருத்தரிப்பு விகிதங்கள் குறைவதால் குழந்தை பெற்றுக்கொள்ள மாற்று வழிகளை தேடி வருகின்றனர். வாடகை தாய், செயற்கை கருவூட்டல், என்று அறிவியல் வளர்ச்சியில் பல மகப்பேறு முறைகள் உருவாகி வருகின்றன.
இந்நிலையில் EctoLife எனும் பெர்லினை தளமாகக் கொண்ட நிறுவனம் உலகின் முதல் செயற்கை கருப்பை முறையில் குழந்தையை உருவாக்கி வளர்க்கும் முறையை அறிமுகப்படுத்துகிறது. தாயின் கருவறை போலவே செயற்கையாக உருவாக்கப்படும் இந்த கருப்பை வசதி மூலம் ஒரு வருடத்திற்கு 30,000 குழந்தைகளை உருவாக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
EctoLife நிறுவனம் இதுகுறித்த ஒரு வீடியோ பதிவை இணையத்தில் வெளியிட்டுள்ளது.அதில் மலட்டுத்தன்மையுள்ள பெற்றோருக்கு குழந்தைகளை கருத்தரிக்கவும், உண்மையான உயிரியல் பெற்றோராக அவர்கள் மாறவும் இந்த வசதி உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலான அற்புதமான அறிவியல் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ஹஷேம் அல்-கைலி என்ற அறிவியலாளர் உருவாக்கிய இந்த நிறுவனத்தில் பெண்களின் கருப்பையின் சூழலை அப்படியே பிரதிபலிக்கும் செயற்கையான கருப்பை அமைப்பை உருவாகியுள்ளது.
புற்றுநோய் மற்றும் பிற சிக்கல்களால் கருப்பையை இழக்கும் பெண்களுக்கு EctoLife ஒரு தீர்வாக மாறும் என்று அந்நிறுவனம் தெரிவிக்கிறது. தாயின் கருப்பையில் இருக்கும் திரவத்தை போலவே இதிலும் செயற்கையான திரவம் நிரப்பப்பட்டு அதில் கருவை வளர்க்கின்றனர். வளரும் கருவிற்கு செயற்கை தொப்புள்கொடி மூலம் செறிவூட்டப்பட்ட சத்துக்களை அனுப்புகின்றனர். அதேபோல் குழந்தையின் கழிவுகளையும் வெளியே எடுத்து புதுப்பித்து பயன்படுத்துகின்றனர்.
தம்பதிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட கருவை ஒரு செயற்கை கருப்பையில் பொருத்துவதற்கு முன்பு மரபணு ரீதியாக அதை திருத்தி வடிவமைக்கும் வசதியை அளிக்கிறது. குழந்தையின் புத்திசாலித்தனம், உயரம், வலிமை, முடி, கண் நிறம் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்து அதன் படி உருவாக்குவது, மேலும், மரபணு நோய்களை இந்த மரபணு திருத்தம் மூலம் தவிர்க்கலாம் என்கின்றனர்.
EctoLife முற்றிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் இயக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு வளர்ச்சி கருப்பை பெட்டிகளும் குழந்தையின் இதயத் துடிப்பு, வெப்பநிலை, இரத்த அழுத்தம், சுவாச வீதம் மற்றும் ஆக்ஸிஜன் செறிவு உள்ளிட்ட முக்கிய அறிகுறிகளைக் கண்காணிக்கக்கூடிய சென்சார்களைக் கொண்டுள்ளன.
அவற்றை அவ்வப்போது பெற்றோர் தங்கள் போனில் இருந்து பார்த்துக்கொள்ளும் வசதியை ஏற்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. இதை அவர்களது லேப்களில் மட்டும் அல்லாமல் வீட்டிலேயே வைத்து தங்கள் கருவை வளர்க்கலாம் என்று கூறுகிறது.
மக்கள் தொகை சரிவால் கவலையுறும் ஜப்பான், பல்கேரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு இது பெரிதும் உதவும் என்கின்றார் அறிவியலாளர் ஹஷேம். 400 செயற்கை கருப்பைபைகள் கொண்ட 75 லேப்களில் வருடத்திற்கு சுமார் 30,000 கருக்களை வளர்க்க முடியும் என்று கூறியுள்ளார். இது புதிய அறிவால் புரட்சியாக இருக்கும் என்றும் தெரிவிக்கிறார்.
Discussion about this post