வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அதன்படி
12.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
13.12.2022 மற்றும் 14.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. வரும் 13 மற்றும் 16 தேதிகளில் வங்கக் கடலில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இது புயல் சின்னமாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும், ஆனால் வலுவிழக்கத்தான் அதிகம் வாய்ப்பு எனக் குறிப்பிட்டுள்ளனர். ஒருவேளை இந்த புயல் உருவானால் இதற்கு மொக்கா எனப்பெயரிடப்படும்.
நேற்று எங்கெல்லாம் மழை ?
வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, திருவள்ளூர், விழுப்புரம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.
மாண்டஸ் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்த நிலையில், சற்று ஓய்ந்திருந்தது. இந்நிலையில் நேற்று விழுப்புரம், கோலியனூர், விக்கிரவாண்டி, அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மரக்காணம், வானூர், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர், கமலாபுரம், கொரடாச்சேரி, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. மயிலாடுதுறை, குத்தாலம், மங்கைநல்லூர், மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. பாலாற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதற்கிடையே நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் சாரல் மழையுடன், கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி வாகனங்கள் சென்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. மெய்யூர், புள்ளரம்பாக்கம், திருப்பாச்சூர், கடம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால், சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. திருவள்ளூரில் வைத்திய வீரராகவர் சுவாமி கோயில் முன் மழைநீருடன் கழிவுநீர் கலந்ததால், பக்தர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.
Discussion about this post