விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி எப்போது கட்டி முடிக்கப்படும் என்று காத்திருக்கும் பொதுமக்கள்
விருதுநகரில் பல் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இன்னமும் கட்டுமானம் தொடங்கப்படாமல் உள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை போல விருதுநகர் பல் மருத்துவ கல்லூரியும் வெறும் அறிவிப்போடு இருப்பதால் கல்லூரியானது எப்போது விருதுநகருக்கு வரும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை காணப்படுகிறது.
தமிழகத்தில் சென்னை மற்றும் கடலூரில் மட்டுமே அரசு பல்மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக மூன்றாவதாக தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் விருதுநகரில் 50 கோடி ரூபாய் செலவில் அரசு பல் மருத்துவக் கல்லூரி ஒன்று அமைக்கப்படும் என கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இதற்கென சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தற்போது புதிய மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டுள்ள இடத்திற்குஅருகில் 5 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து,ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் முடிவில் அதிகாரிகள் இந்த இடம் அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என அறிவிப்பு பலகை ஒன்றை நட்டு வைத்தனர். அதன் பின்னர் தற்போது இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் கட்டுமான பணிகள் ஏதும் தொடங்காமல் அறிவிப்பு பலகை மட்டுமே பல் மருத்துவ கல்லூரி சாட்சியாக அங்கு காணப்படுகிறது.
விருதுநகரில் பல் மருத்துவ கல்லூரி அமைந்தால் அது தென்மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் மக்கள் அனைவரும் இதை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், மருத்துவ கல்லூரி கட்ட தேர்வு செய்யப்பட்ட இடமோ புதர் மண்டி காணப்படுகிறது. அரசு மற்றும் அதிகாரிகள் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து விரைந்து கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Discussion about this post