சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் உள்ளிட்டோர் மோப்ப நாய் உதவியுடன் ஆய்வுப்பணியை மேற்கொண்டனர்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. ரயில் நிலையங்களிலும் பயணிகளின் உடைமைகளை போலீஸார் சோதனை செய்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் பாபர் மசூதி இடிப்பு தினத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இதன்படி, தமிழ்நாடு முழுவதும் 1.2 லட்சம் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் உள்ளிட்டோர் மோப்ப நாய் உதவியுடன் ஆய்வுப்பணியை மேற்கொண்டனர். பயணிகளின் உடமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
திருப்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மாவட்டத்தில் உள்ள கோயில்கள், மசூதிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல, முக்கிய வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்
சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் இணைந்து மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தி வருகின்றனர். ரயில் நிலையத்திற்குள் வரும் பயணிகளின் பைகள் மற்றும் பொருட்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. சேலம் வழியாக செல்லும் ரயில்களிலும் சோதனை நடைபெறுகிறது.
Discussion about this post