கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொண்டாடப்படும் நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினசரி சாமி வீதியுலாவை பக்தர்கள் கண்டு களித்து வருகின்றனர். விழாவின் பத்தாம் நாளான இன்று அதிகாலை 3.45 மணிக்கு ஏகன் அனேகமாக மாறும் தத்துவத்தை விளக்கும் வகையில் கோயில் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
கோவில் கருவறையில் ஏற்றப்பட்ட பரணி தீபத்தை சிவாச்சாரியார் ஊர்வலமாக கொண்டு சென்று மற்ற சன்னதிகளிலும் பரணி தீபத்தை ஏற்றினார்.
தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். இந்த பரணி தீப விழாவில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
Discussion about this post