ஈரானில் ஹிஜாப் போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கும் விதமாக கலாச்சார காவல்பிரிவை அந்நாட்டு அரசு கலைத்துள்ளது.
இஸ்லாமிய நாடான ஈரானில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகிறது. அங்கு 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற சட்ட விதிமுறைகள் பின்பற்றவது கண்காணிப்பதற்கு என்று கலாசார காவல்படை (Morality Police) என்ற தனி காவல்பிரிவு உருவாக்கப்பட்டிருந்தது.இந்த காவல்படை பிரிவு, விதிமுறைகளை மீறும் நபர்களிடம் பார்த்த இடத்திலேயே கடும் தண்டனை வழங்கி அச்சுறுத்தலை அளித்து வந்தது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி ஹிஜாப் அணியாமல் காரில் பயணம் செய்த 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் இந்த கலாசார காவல்துறை பிடித்து கைது செய்தது. இந்த கைது நடவடிக்கையின் போது அந்த இளம்பெண் மாஷா கடுமையாக தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் மாஷா பரிதாபமாக உயிரிழந்தார்.மாஷா அமினியின் மரணம் அந்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து ஈரானில் இந்த சட்டத்திற்கு எதிராக பெண்கள், கல்லூரி மாணவர்கள், மனித உரிமையாளர்கள உள்ளிட்டோர் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டத்தை அரசு காவல்துறையை வைத்து கடுமையாக அடக்கி ஒடுக்கி முயற்சி செய்தது.இந்த மூன்று மாத போராட்டத்தில் காவல்துறை அடக்குமுறை காரணமாக 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்பு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. போராட்டத்திற்கு ஆதரவு தந்த பிரபலங்கள் உள்பட பலரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இத்தனை அடக்குமுறைக்குப் பின்னரும் போராட்டக்காரர்கள் ஓய்வதாக இல்லை. இந்த போராட்டம் சர்வதேச அளவிலும் பெரும் கவனத்தை பெற்று, மனித உரிமை அமைப்புகள் போராட்டக்காரர்களுக்கு பெரும் ஆதாரவை தந்தன.
இந்நிலையில், போராட்டம் தொடங்கிய மூன்று மாதங்களான நிலையில் அதற்கு முதல் வெற்றியாக ஈரான் அரசு ‘காஸ்த் எர்ஷாத்’என்ற கலாசார காவல்துறை என்ற பிரிவை கலைத்துள்ளது. இதன் மூலம் 2006ஆம் ஆண்டு அன்றைய அதிபர் மகமூத் அகமது நிஜாத் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கலாசார படை பெண்களின் எழுச்சி போராட்டத்தால் கலைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post