தொற்றுநோய் காலத்தில் வேகமாக முதுமையடைந்துள்ள சிறுவர்கள் மூளை- ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
தொற்றுநோய்க்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட 163 குழந்தைகளின் எம்ஆர்ஐ ஸ்கேன்களை ஒப்பிடுவதன் மூலம், கோட்லிபின் ஆய்வு, வளர்ச்சி விரைவுபடுத்துவதைக் காட்டுகிறது.
சமீபத்தில் நடந்த ஒரு புதிய ஆய்வின்படி, தொற்றுநோய் காலத்தில் இளம் பருவத்தினரின் மூளை உடல் ரீதியாக சீக்கிரம் வயதானதாக தெரிவிக்கிறது. பயோலாஜிக்கல் சைக்கியாட்ரி: குளோபல் ஓபன் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன ஆய்வு முடிவுகளின் படி தொற்றுநோயால் இளம் பருவத்தினருக்கு நரம்பியல் மற்றும் மனநல பாதிப்புகள் இன்னும் மோசமாக இருந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, 2020 ஆம் ஆண்டில் மட்டும், மனிதர்களின் கவலை மற்றும் மனச்சோர்வு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 25 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது மன ரீதியான பாதிப்பை தான் ஏற்படுத்தி இருக்கும் என்று நினைத்து வந்த நிலையில் உடல் ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
இது குறித்து ஆய்வின் தலைவர் இயன் கோட்லிப் கூறும்போது, வயதாகும்போது நம் மூளையின் கட்டமைப்பில் மாற்றங்கள் இயற்கையாகவே நிகழ்கின்றன. அதேபோல் பருவமடைதல் மற்றும் டீன் ஏஜ் ஆண்டுகளில், குழந்தைகளின் உடல்கள் ஹிப்போகாம்பஸ் மற்றும் அமிக்டாலா ஆகிய இரண்டிலும் அதிகரித்த வளர்ச்சியை அனுபவிக்கின்றன.
ஹிப்போகாம்பஸ் சில நினைவுகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துகின்றன மற்றும் அமிக்டாலா உணர்ச்சிகளை மாற்றியமைக்க உதவுகின்றன. அதே நேரத்தில், கார்டெக்ஸில் உள்ள திசுக்கள், நிர்வாக செயல்பாட்டில் ஈடுபடும் பகுதி, இது மனிதன் வளர வளர மெல்லியதாகும்.
தொற்றுநோய்க்கு முன் இளம் பருவத்தினர் பருவமடையும்போது ஏற்படும் மனச்சோர்வு குறித்த ஆய்வை இவர் தொடங்கியுள்ளார். தொற்றுநோய் காரணமாக தடைபட்ட ஆய்வை 1 வருடம் கழித்து மீண்டும் தொடர்ந்துள்ளார். அப்போதுதான் இந்த பெரிய மாற்றம் கண்டறியப்பட்டுள்ளது. 1 வருடத்தில் நடக்க வேண்டிய உடல்ரீதியான வளர்ச்சியை தாண்டி மூளை மாறி இருப்பது தெரியவந்துள்ளது.
தொற்றுநோய்க்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட 163 குழந்தைகளின் எம்ஆர்ஐ ஸ்கேன்களை ஒப்பிடுவதன் மூலம், கோட்லிபின் ஆய்வு, வளர்ச்சி விரைவுபடுத்துவதைக் காட்டுகிறது.
பொதுவாக இது போன்ற விரைவான மாற்றங்கள் வன்முறை, புறக்கணிப்பு, மன உளைச்சல் போன்றவற்றிற்கு ஆளான குழந்தைகளில் மட்டுமே தோன்றியுள்ளன. இந்த சம்பவங்கள் அவர்களது மனநலத்தை பாதித்து மூளை கட்டமைப்பை மாற்றும். ஆனால் அவை ஏதும் இல்லாமலே தொற்றுநோய் காலத்தில் மாறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாற்றம் தற்காலிகமானதா அல்லது சிறிது காலத்திற்கா என்ற தெளிவு கிடைக்கவில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மூளையின் உடல்ரீதியான மாற்றம் மனரீதியாகவும் மாற்றம் ஏற்படுத்தியுள்ளது என்று பகுப்பாய்வு செய்து வருகின்றனர். அப்படி மாற்றம் ஏற்பட்டால் விளைவுகள் வரும்காலத்தில் எப்படி இருக்கும் என்றும் கணித்து வருகின்றனர்.
70 அல்லது 80 வயதுடையவர்களுக்கு, மூளையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் சில அறிவாற்றல் மற்றும் நினைவாற்றல் பிரச்சனைகள் எழும். அதே மாற்றங்கள் 16 வயது சிறுவரிடம் வந்தால் என்ன ஆகும் என்ற அச்சமும் எழுகிறது.
Discussion about this post