தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரியில் அமைக்க அனுமதி கோரப்பட்டு உள்ளதாக, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர் வரவேற்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதையடுத்து சென்னை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கியினை மைச்சர் மா.சுப்பிரமணியம் வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
சென்னை மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் வணக்கம். இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது எனக்கு கிடைத்த பாக்கியம். நிகழ்ச்சி தாமதமாக தொடங்கியதற்கு எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். நேற்று நடைபெற்ற பேருந்து விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க செங்கல்பட்டு சென்றேன். அதனால் தாமதம். பெற்றோருக்கும் எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த கல்லூரி பழமை வாய்ந்த கல்லூரிகளில் ஒன்று. இந்தியாவில் இரண்டாவதாக தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரி சென்னை மருத்துவக் கல்லூரி. 1835 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த வரலாற்று சிறப்புமிக்க கல்லூரி. இந்த மருத்துவமனையின் வயது 300 ஆண்டுகளுக்கு மேலானது. இந்த மருத்துவமனை இந்தியாவின் பழமை வாய்ந்த மருத்துவமனையில் முதலிடம் உள்ளது.
இந்த கல்லூரியில் பயின்றவர்கள் பத்மஸ்ரீ உள்ளிட்ட விருது பெற்று உலக அளவில் புகழ் பெற்ற மருத்துவர்களாக உள்ளனர். பேராசிரியர் மருத்துவர் சாரதா, டி.எஸ்.கனகா, அடையாறு புற்றுநோய் நிபுணர் மருத்துவர் வி.சாந்தா, நீரழிவு நோய் பாதிப்பை உலகறிய செய்த ஷேசையா உள்ளிட்ட புகழ்பெற்ற மருத்துவர்கள் இந்த மருத்துவக் கல்லூரியில் பயின்றவர்கள்.
தமிழக முதல்வர் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளில் மருத்துவத் துறையை மேம்படுத்தி வருகிறார். அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்தவர் தமிழக முதல்வர். அரசு பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு மட்டும் எம்.பி.பி.எஸ். 459, பல் மருத்துவம் 106 என மொத்தம் 565 பேர் தேர்வாகி உள்ளனர்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக மருத்துவக் கல்லூரி உள்ளது. தமிழகத்தில் அரசியல் மற்றும் தனியார் இடம் ஒட்டு மொத்தமாக 71 மருத்துவக் கல்லூரி உள்ளன. தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரியில் அமைக்க அனுமதி கோர இருக்கிறோம். அதற்கான முயற்சியில் தமிழக முதல்வர் ஈடுபட்டு வருகிறார். அங்கேயும் மருத்துவக் கல்லூரி அனுமதிக்கப்பட்டால் இந்தியாவிலேயே அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி உள்ள மாநிலமாக தமிழகம் மாறும் என இவ்வாறு அவர் கூறினார்.
Discussion about this post