திருவண்ணாமலையில் கார்த்திகை தீப தினத்தன்று உரிய அனுமதிச் சீட்டு இல்லாத எவரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் வருகிற 6ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில், கிரிவலப் பாதை, பக்தர்கள் அமரும் இடம், விஐபிகள் அமருமிடம் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பு நிலை குறித்து டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக கோவில் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நடப்பாண்டு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்றார்.
மகா தீபத்தைக் காண வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கையாக பார்கோடு வசதியுடன் கூடிய பாஸ் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். தீபத் திருவிழா நாளில் 12 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் சைலேந்திர பாபு தெரிவித்தார்.
மேலும் கார்த்திகை தீப தினத்தன்று உரிய அனுமதிச் சீட்டு இல்லாத எவரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த டிஜிபி சைலேந்திர பாபு திட்டவட்டமாக தெரிவித்தார்.
Discussion about this post