கணவன் உடலை மகனின் உதவியுடன் 22 துண்டுகளாக மனைவி வெட்டி படுகொலை செய்த சம்பவம் டெல்லியில் அரங்கேறி உள்ளது.
கிழக்கு டெல்லியில் உள்ள பாண்டவ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பூணம். இவரது கணவர், அஞ்சன் தாஸ். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். பூணம் முதல் கணவர், கடந்த 2017 ஆம் ஆண்டு புற்று நோய் காரணமாக உயிரிழந்தார். இவர்களுக்கு தீபக் என்ற மகன் இருக்கிறார். இதை அடுத்து, அஞ்சன் தாஸை, பூணம் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், பூணமின் நகைகளை விற்று, அந்தப் பணத்தை, பீகார் மாநிலத்தில் வசிக்கும் தனது முதல் மனைவிக்கு அஞ்சன் தாஸ் கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பூணம், தனது முதல் கணவரின் மகன் தீபக் உதவியோடு, அஞ்சன் தாஸை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, இருவரும் சேர்ந்து அஞ்சன் தாஸை துண்டு துண்டுகளாக வெட்டிக் கொலை செய்தனர். இந்தக் கொலை சம்பவம் கடந்த ஜூன் மாதம் நடந்துள்ளது.
அஞ்சன் தாஸ் உடலை 22 துண்டுகளாக வெட்டிய பூணம் – தீபக் ஆகியோர், அதை வீட்டில் உள்ள ஃபிரிட்ஜில் வைத்துள்ளனர். இதன் பிறகு, உடலின் ஒவ்வொரு பாகங்களையும் எடுத்துச் சென்று டெல்லி ராம் லீலா மைதானத்தில் புதைத்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த டெல்லி க்ரைம் பிரிவு போலீசார், பூணம் மற்றும் தீபக் ஆகியோரை கைது செய்தனர். இந்தக் கொலையை இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதுவரை, அஞ்சன் தாஸ் உடலின் 6 பாகங்களை போலீசார் கண்டெடுத்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை அவரது காதலன் அப்தாப் அமீன் பூனாவாலா கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில் வீசிய கொடூர சம்பவம் நடந்து சில நாட்களே ஆகி உள்ள நிலையில், மீண்டும் அதே போன்றதொரு சம்பவம் நடைபெற்றுள்ளது, டெல்லியை மட்டுமல்லாமல், நாட்டையே மீண்டும் உலுக்கி உள்ளது.
Discussion about this post