ஆளுநர் ஆர்.என்.ரவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது 2022
ஆரோவில் அறக்கட்டளை தலைவராக ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிக்கும் தமிழக ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் (தபெதிக) காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக ஆளுநராக கடந்த 2021 செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மம் பற்றி பேசி சர்ச்சைக்குள்ளாவதாகவும், பொது நலன் கருதி எடுக்கப்பட்ட தமிழக அரசின் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ஆம் தேதி அவர், ஆரோவில் அறக்கட்டளையின் தலைவராக நான்கு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆரோவில் அறக்கட்டளை சட்டப்படி, தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டவருக்கு ஊதியம், படி, ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்கப்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியல் சாசனம் 158 (2) வது பிரிவின்படி, ஆளுநராக பதவி வகிப்பவர், ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிக்க கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆரோவில் அறக்கட்டளை தலைவராக பொறுப்பேற்ற நாளில் இருந்து ஆர்.என்.ரவி, ஆளுநராக பதவியில் நீடிக்க தகுதியிழப்பு ஆகிறார் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
எந்த தகுதியின் அடிப்படையில் அவர், ஆளுநர் பதவியில் நீடிக்கிறார் என விளக்கம் கேட்டு, தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு வழக்கு எண்ணிடப்பட்ட பிறகு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள், பேச்சுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றன. தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக ஆளுநரின் செயல்பாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்ற வேண்டும் என்று தமிழக எம்.பி.க்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் மனு அளித்துள்ளனர். அது தொடர்பாக குடியரசுத் தலைவர் என்ன முடிவெடுப்பார் என்று எதிர்பார்ப்புகள் நிலவிவந்த போது, தமிழக ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதும், விரைவில் இவ்வழக்கு விசாரணைக்கு வர உள்ளதும் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post