அசாம் மாநிலம் திப்ருகர் பல்கலைக்கழகத்தில் சீனியர்களின் ராகிங் தொல்லையை தாங்க முடியாத ஜூனியர் மாணவர் ஒருவர், விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அசாம் மாநிலத்தில், முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள திப்ருகர் என்ற இடத்தில் திப்ருகர் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் பல மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில், திப்ருகர் பல்கலைக்கழகத்தில், வணிகவியல் துறையில், ஆனந்த் சர்மா என்ற மாணவர் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவரை இந்தப் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் சீனியர் மாணவர்கள், ராகிங் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஆனந்த் சர்மா, விடுதி கட்டடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அருகில் உள்ள மாணவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஆனந்த் சர்மாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர்கள் காவல் துறையில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மாணவர் ஆனந்த் சர்மாவை ராகிங் செய்த ஒரு முன்னாள் மாணவர் மற்றும் பல்கலைக்கழகத்தில் படிக்கும் 4 சீனியர் மாணவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
திப்ருகர் பல்கலைக்கழகத்தில் ராகிங் காரணமாக மாணவர் ஒருவர் காயம் அடைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. காயம் அடைந்த மாணவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராகிங் வேண்டாம் மாணவர்களே..!
இதற்கிடையே, மேலும் இரண்டு ஜூனியர் மாணவர்களும் ராகிங்கிற்கு ஆளாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக ராகிங் தடுப்பு குழுவும் விசாரணை நடத்தி வருகிறது.
Discussion about this post