5,000 இடங்களில் ‘நான் ஸ்டாப்’ போராட்டம் 2022
தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக பாஜக வளர்ந்து கொண்டிருப்பதாக அக்கட்சியினர் கருதுகின்றனர். அதிமுகவின் கூட்டணியில் தேர்தலை சந்தித்து வரும் பாஜக, அடுத்த தேர்தலில் கணிசமான தொகுதிகளை கேட்டு பெறவும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் திமுகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி எதிர்க்கட்சி என்ற நிலையை கட்சிதமாக பாஜக உருவாக்கிக்கொள்கிறது.
அண்மையில், பால் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக போராட்டம் நடத்தியது. இந்த நிலையில் தமிழத்தில் சட்டம் ஒழுங்கு மீது குற்றம் சாட்டியுள்ள பாஜக, அடுத்த முறை தமிழகம் முழுவதும் 5000 இடங்களில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது; தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மோசமாக உள்ளது. பெயருக்காக உள்ள சில அரசியல் கட்சிகள் தேச விரோத செயல்களில் ஈடுபடுவதை பார்த்து வருகிறோம். ஆனால், நாட்டுக்காக பணியாற்றும் ஒரு ராணுவ வீரரை இங்குள்ள அரசியல் கட்சி வீடியோ வெளியிட்டு மிரட்டுகிறது. பாதுகாப்பு பணியில் இருக்கும் ஒரு வீரரை அச்சுறுத்தி, உங்கள் குடும்பத்தினர் தமிழகத்தில் தான் இருக்கிறார்கள் மறந்து விடாதீர்கள் என்று மிரட்டியுள்ளனர்.
சட்டம் ஒழுங்கு ஆளுங்கட்சியில் உள்ளது என்ற தைரியத்தில் இப்படி நடந்து கொள்கிறார்கள். நான் அந்த ராணுவ வீரரின் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து அழைத்து பேசியுள்ளேன். தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களுக்கு சுற்று பயணம் மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளோம். முடிந்த வரை அனைத்து கிராமங்களுக்கும் சென்று வளர்ச்சி திட்டங்கள் எந்த அளவுக்கு சென்றுள்ளது என்பதை அலசவுள்ளோம். ஏதேனும் குறைகள் இருந்தால் அதை தீர்த்துவைக்கப்படும்.
ஒவ்வொரு நாளும் திமுக அரசின் மீது மக்களின் வெறுப்பு அதிகமாகி கொண்டே செல்கிறது. சமீபத்தில் பாஜக சார்பில் தமிழகத்தில் பால் விலை உயர்வை கண்டித்து 1200 இடங்களில் போராட்டம் நடந்தது. அடுத்தமுறை 5000 இடங்களில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். திமுகவின் தவறுகளை தட்டி கேட்கும் மக்களின் குரலாக பாஜக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும் என்றும் திமுக தனது தவறான பாதையில் இருந்து இன்னும் மாறாமல் அதே பாதையில் சென்று கொண்டிருக்கிறது என அண்ணாமலை கூறினார்.
Discussion about this post