டெல்லி:
ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளுக்குத் தடை விதிக்க கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது
கடந்த 2011ஆம் ஆண்டு காட்சி விலங்குகள் பட்டியலில் சிங்கம், புலி, சிறுத்தை, உள்ளிட்ட வனவிலங்குகளுடன் காளைகளும் சேர்க்கப்பட்டது. இதுதான் ஜல்லிக்கட்டு தடைக்கும் காரணமாக அமைந்தது.
வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காட்சி விலங்குகள் பட்டியலில் உள்ள விலங்குகளைப் பழக்கப்படுத்தி, பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பங்கேற்க வைக்கக் கூடாது. மேலும், மிருக வதை தடுப்பு சட்டத்தையும் சுட்டிக்காட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை மெரினாவில் மிகப் பெரியளவில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்யும் வகையில் அவசரச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. அதன் பிறகு ஜல்லிக்கட்டு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கும் இந்த அவசர சட்டத்திற்குத் தடை கோரி பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீண்டும் வழக்கு தொடர்ந்தன.
ஜல்லிக்கட்டு மட்டுமின்றி, மகாராஷ்டிராவில் நடைபெறும் கம்பாலா உள்ளிட்ட போட்டிகளுக்கும் தடை கோரி வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கை 2018 முதல் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்காத நிலையில், நேற்று வழக்கு விசாரணை தொடங்கியது. முதல் நாளான நேற்று வழக்கு தொடர்பாக பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
இந்தச் சூழலில் இந்த வழக்கில் விசாரணை இரண்டாவது நாளாக இன்றும் தொடர உள்ளது. இரண்டாம் நாளான இன்று பல முக்கிய வாதங்கள் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இந்த வழக்கில் மதுரை தொகுதியின் எம்.பி சு.வெங்கடேசன் எம்.பி, ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்தரநாத் எம்.பி, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களையும் மனுதாரராக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post