திருவனந்தபுரம்:
உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து நாளை அதிகாலை மண்டல காலம் தொடங்க இருக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பூஜை மண்டல காலம் கார்த்திகை ஒன்றாம் தேதி தொடங்கி 41 நாட்கள் இருக்கும். இந்த மண்டல காலம் நாளை தொடங்க இருக்கும் நிலையில் இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட இருக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடையை மேல்சாந்தி திறந்து வைத்து தீபம் ஏற்ற இருக்கிறார். 18 ஆம் படிகள் வழியே ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்து திருநீறு பிரசாதமாக வழங்கப்படும்.
நடை திறப்பு :
அதன் தொடர்ச்சியாக மாலை 6 மணியளவில் தந்திரிக்கு முறைப்படி அபிஷேகம் நடத்தப்பட்டு கோயிலுக்கு அழைத்து செல்வார்கள். இறுதியாக இரவு 10 மணியளவில் நடை அடைக்கப்பட இருக்கிறது. இதையடுத்து நாளை அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டவுடன் இந்த ஆண்டின் மண்டல காலம் தொடங்கும்.
ஆன்லைன் தரிசனம் :
இதையடுத்து நெய் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் ஐயப்பன் கோயிலில் நடத்தப்பட்டு டிசம்பர் 27 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு ஆன்லைன் முன்பதிவு மூலமாக ஒரு லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன.
முன்பதிவு :
ஏற்கனவே முன்பதிவு செய்யாத பக்தர்கள், கோயில் அருகே முன்பதிவு செய்ய சபரிமலை பாதையில் 13 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு புகைப்படம் இணைக்கப்பட்ட அரசு அடையாள அட்டையை பக்தர்கள் முன்பதிவு செய்ய வைத்திருக்க வேண்டியது அவசியம்
4 ஆண்டுகளுக்கு பின் :
கேரள பெருமழை வெள்ளம், சபரிமலைக்கு பெண்கள் வரலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு, கொரோனா பெருந்தொற்று போன்ற பல்வேறு காரணங்களால் சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால சீசன் முழுமையாக நடைபெறாமலேயே இருந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு கொரோனா, கனமழை போன்ற சிக்கல்கள் இல்லாததால் பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு ரயில், பேருந்து :
இதற்காக கேரள அரசு, மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருக்கின்றன. சபரிமலை ஐயப்பன் கோயில் பூஜைக்காக தெலுங்கானா மற்றும் ஆந்திராவிலிருந்து தமிழ்நாடு வழியாக 18 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட இருக்கின்றன. அதேபோல் சென்னை, மதுரை, கோவை, சேலம், தேனியிலிருந்து பொங்கல் வரை தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளையும் இயக்க உள்ளது.
Discussion about this post