சென்னை:
வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தம் கடந்த 11, 12, 13 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழையை கொடுத்தது. இது கடந்த 12 ஆம் தேதி வலுவிழந்து குறைந்த காற்றழுத்தமாகவே அரபிக் கடலில் கலந்தது.
தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை பெய்த சிறப்பான வடகிழக்கு பருவமழைகளில் இந்த வருடம் பெய்யும் மழையும் ஒன்றாகும். வடகிழக்கு பருவமழையில் இதுவரை இரண்டு காரணங்களுக்காக தமிழ்நாட்டில் மழை பெய்து உள்ளது.
நேற்று முன் தினம்வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இன்று காலை வெயில் காய்ந்தது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் பனிபொழிந்து வருகிறது.
புல்வெளிகளில் பனி :
நேற்று காலை புல்வெளிகள், வாகனங்களில் பனிபடிந்திருந்தது. காலை 9.30 மணி வரை குளிர் வாட்டி எடுத்தது. மாலை 5.30 மணிக்கெல்லாம் மீண்டும் பனி இறங்கத் தொடங்கிவிட்டது. மாலை 6.30 மணிக்கெல்லாம் இருள் சூழ்ந்தது. கட்டடத்தில் புகை மூட்டம் ஏற்பட்டது போல் பனி மூட்டம் இருந்தது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி பயணித்தன.
இன்று புதிய காற்றழுத்தம் :
இந்த நிலையில் இன்றைய தினம் தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் தமிழகம், புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வரும் 19 ஆம் தேதி அல்லது 20ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வெதர்மேன் போஸ்ட் :
இந்த நிலையில் இந்த பனி மூட்டம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் ஒரு புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார். அதில் வடகிழக்கு தமிழகம், தமிழகத்தின் உள்மாவட்டங்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு பனிமூட்டமாகத்தான் இருக்கும் என கூறி பனி விழும் மலர்வனம் பாடல் வரிகளை பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிலந்தி வலையில் பனித்துளிகள் தெரியும்படியான புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
நெட்டிசன்கள் :
இந்த போஸ்ட்டில் பிரதீப் ஜானிடம் அவரது பாலோயர்ஸ்கள் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார்கள். அதில் அடுத்த மழை எப்போது வரும், இன்று உருவாகும் காற்றழுத்தம் புயலாக மாறுமா, புயலாக மாறினால் அது எந்த பகுதிக்கு செல்லும் போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளனர். அப்போ துணி காயாதுனு சொல்லுங்கள் என சிலர் நகைச்சுவையாக கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஏற்கெனவே உருவான காற்றழுத்தத்தால் சீர்காழி மிகவும் மோசமடைந்தது. தற்போது புயல் உருவாகினால் எந்த பகுதி பாதிக்கப்படுமோ என விவசாயிகளும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளார்கள்.
Discussion about this post