நியூயார்க் 2024 :
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். 2020 அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்டு டிரம்ப் தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் தேர்தலில் போட்டியிவதாக டிரம்ப் அறிவித்து உள்ளார்.2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக பிடன் போட்டியிட்டு வென்றார். இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் பிடன் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது சந்தேகம். பெரும்பாலும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அல்லது மூத்த செனட்டர்கள் யாராவது ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட வாய்ப்பு உள்ளது.
அதிபர் தேர்தல் :
இந்த நிலையில்தான் 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக மீண்டும் போட்டியிடுவதாக டிரம்ப் அறிவித்து உள்ளது. அமெரிக்க கட்சி விதிகளின்படி 2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு டிரம்ப் உட்கட்சி பிரைமரி தேர்தலில் வெல்ல வேண்டும். அதாவது கட்சிக்கு உள்ளேயே இரண்டு, மூன்று பேர் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவார்கள். இவர்களுக்குள் உட்கட்சி பிரைமரி தேர்தல்நடக்கும்.
குடியரசு கட்சி :
இவர்களுக்குள் விவாத நிகழ்ச்சி தொடங்கி யார் அதிக பணத்தை நன்கொடையாக பெறுகிறார்கள் என்ற போட்டியும் நடக்கும். இதன் அடிப்படையில் கட்சி சார்பாக ஒருவர் பிரைமரி தேர்தலில் வென்று, கடைசியாக கட்சி சார்பாக அதிகாரபூர்வ வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார். டிரம்பும் இதே தேர்தல் நடைமுறைகளை கடந்து வர வேண்டும். தற்போது தற்போது பிரைமரி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாகவே அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நாமினேஷனை டிரம்ப் தாக்கல் செய்துள்ளார்.
பிரைமரி தேர்தல் :
பிரைமரி தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்தால், இந்த நாமினேஷனை திரும்ப பெறுவார். அமெரிக்க மீண்டும் பழைய நிலைக்கு வரப்போகிறது. அமெரிக்காவின் கம் பேக் சிறப்பாக இருக்க போகிறது, என்று டிரம்ப் தனது அறிவிப்பில் தெரிவித்து உள்ளார். ஆனால் கடந்த முறையை போல இந்த முறை அதிபர் பிரைமரி தேர்தலில் வாக்குகள் டிரம்பிற்கு ஆதர்வாக வருமா என்ற சந்தேகம் உள்ளது. ஏனென்றால் கட்சிக்கு உள்ளேயே அவரை சிலர் எதிர்க்க தொடங்கி உள்ளனர்.
தேர்தல் எப்படி?
நடந்து முடிந்த அமெரிக்க மிட் டேர்ம் தேர்தலில் டிரம்பின் குடியரசு கட்சி பெரிதாக சோபிக்கவில்லை. அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட் சபை, பிரதிநிதிகள் சபை இரண்டையும் கைப்பற்றுவோம் என்று நினைத்துக்கொண்டு இருந்த டிரம்ப்பின் குடியரசு கட்சி மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்து உள்ளது. எதிர்பார்த்ததை விட பிடனின் ஜனநாயக கட்சி தேர்தலில் முன்னிலை பெற்று உள்ளது.
டிரம்ப் தேர்தல் :
செனட் தேர்தலில் பிடனின் ஜனநாயக கட்சி இந்த தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு உள்ளது. அரிஸோனாவை வென்றதன் மூலம் அங்கு செனட் சபையில் ஜனநாயக கட்சிக்கு மெஜாரிட்டி கிடைத்து உள்ளது. இதுவரை வெளியான முடிவுகளின் படி, செனட் சபை – 34 இடங்களில் 35 இடங்களுக்கு முடிவு வந்துள்ளது. அதில் 19ல் டிரம்பின் குடியரசு கட்சி வென்றுள்ளது. 14 இடங்களில் பிடனின் ஜனநாயக கட்சி வென்றுள்ளது. தேர்தல் நடக்காத பழைய இடங்களையும் சேர்த்து டிரம்பின் குடியரசு கட்சிக்கு 49 செனட்டர்கள், ஜனநாயக கட்சிக்கு 50 பேர் உள்ளனர். இதனால் ஜனநாயக கட்சிக்கு மெஜாரிட்டி உள்ளது.
செனட் தேர்தல் :
இன்னொரு பக்கம் பிரதிநிதிகள் சபையை மட்டும் டிரம்பின் குடியரசு கட்சி கைப்பற்றி உள்ளது,. பிரதிநிதிகள் சபை – 426 இடங்களில் 415 இடங்களுக்கு முடிவு வந்துள்ளது. அதில் 218 ல் டிரம்பின் குடியரசு கட்சி வென்றுள்ளது. குடியரசு கட்சி இதில் பெரும்பான்மை பெற வாய்ப்பு உள்ளது. 209 இடங்களில் பிடனின் ஜனநாயக கட்சி வென்றுள்ளது. இங்கு மெஜாரிட்டி பெற 218 இடங்களில் வெல்ல வேண்டும். இதில் செனட் தேர்தலில் டிரம்பின் குடியரசு கட்சி தோல்வி அடைந்த காரணத்தால் கட்சியில் நிர்வாகிகள் பலர் டிரம்ப் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். அமெரிக்கா ஒரு வீழும் நாடு என்று டிரம்ப் புலம்பும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது. அவரின் கட்சியினரே அவரை கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். டிரம்பை சரமாரியாக விமர்சனம் செய்து உள்ளனர். அவரால்தான் குடியரசு கட்சி தோல்வி அடைந்து, ஜனநாயக கட்சி வென்றது என்று விமர்சனம் வைத்து வருகின்றனர். இதனால் உட்கட்சி பிரைமரி தேர்தலில் வாய்ப்பு கிடைத்து அதன்பின் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வாய்ப்பு டிரம்பிற்கு கிடைப்பதே சிக்கலாகி உள்ளது.
Discussion about this post