சென்னை :
மீன் தொட்டியில் விளையாட்டு பொருள் விழுந்ததால் அதை எடுக்கும் போது தவறி விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, அம்பத்தூரில் உள்ள வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். பிளம்பிங் வேலை செய்து வரும் இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த கெளசல்யா என்பவருக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது இவர்களுக்கு ஒன்றரை வயதில் மீனாட்சி என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று காலை யுவராஜ் வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். அதே வேளையில் கெளசல்யாவும் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அப்போது குழந்தை மீனாட்சி தனது பொம்மைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தது.
குழந்தை விளையாடி தானே கொண்டிருக்கிறது என்று நினைத்த கெளசல்யா, தனது வீட்டு வேலையில் பிசியாக இருந்துள்ளார். அப்போது குழந்தையின் ஒரு விளையாட்டு பொருள் அவர் அருகே கீழே வைக்கப்பட்டிருந்த மீன் தொட்டிக்குள் விழுந்துள்ளது.
எனவே மீன்தொட்டிக்குள் விழுந்த தனது பொம்மையை எடுக்க குழந்தை முயன்றுள்ளது. அப்போது அந்த மீன் தொட்டிக்குள் குழந்தை தவறுதலாக விழுந்துள்ளது. இதையடுத்து சுமார் 10 நிமிடங்கள் கழித்து குழந்தையின் சத்தம் கேட்கவில்லை என்று கெளசல்யா உணர்ந்துள்ளார். எனவே சமையல் அறையில் இருந்து வெளியே வந்து பார்க்கையில் குழந்தை தலைகுப்புற விழுந்து கிடந்துள்ளது. இதைக்கண்டதும் பதறியடித்த கெளசல்யா, குழந்தையை தூக்கி அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கே குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post