டெல்லி :
டெல்லியில், திருமணமானமாகி 20 ஆண்டுகளாக குழந்தை இல்லாத தம்பதியர் ஐ.வி.எஃப் (IVF) மூலம் மருத்துவமனையில் குழந்தையைப் பெற்றிருக்கிறார்கள். அந்தக் குழந்தை மருத்துவமனையில் இருந்தபோது தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அந்தக் குடும்பத்துடன் அறிமுகமாகியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, குழந்தையின் வளர்ச்சி குறித்து கண்காணிக்க வேண்டும் என தம்பதியின் வீட்டு முகவரியையும் பெற்றுச் சென்றிருக்கிறார் அந்தப் பெண்.
இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி குறிப்பிட்ட தம்பதியின் இல்லத்துக்குச் சென்ற ஸ்வேதா என்ற அந்தப் பெண், மருத்துவப் பரிசோதனைக்காக குழந்தையைக் கொண்டு செல்ல வேண்டும். எனவே, குழந்தையை என்னுடன் வெளியே அனுப்பி வையுங்கள் எனக் கேட்டிருக்கிறார். குழந்தையின் தாய், தன்னுடைய உறவினரானப் பெண் ஒருவரை துணைக்கு அனுப்பி வைத்திருக்கிறார். உறவுக்கார பெண்ணும், ஸ்வேதாவும் குழந்தையுடன் சேர்ந்து வெளியே சென்ற நிலையில், அங்கிருந்து ஸ்வேதா அந்தப் பெண்ணுக்கு ஜூஸில் மயக்கமருந்தை கலந்து கொடுத்திருக்கிறார், அதை குடித்து அந்தப் பெண் மயங்கியவுடன், குழந்தையைக் கடத்தியிருக்கிறார். தன் குழந்தை கடத்தப்பட்டதை அறிந்த பெற்றோர், காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பான காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருந்த நிலையில், அதனடிப்படையில் காவல்துறை உடனே அந்தப் பெண்ணை பிடித்து, குழந்தையை மீட்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறையினர், “ஒருமாத காலத்துக்கு முன்பு இறந்த தன் தந்தையை மீண்டும் உயிரோடு மீட்டு கொண்டுவர நரபலி கொடுக்க முடிவு செய்திருக்கிறார் அந்தப் பெண். அதனால், அதற்கான வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தார். அந்தப் பெண், காரில் குழந்தையுடன் தெருக்களில் இரவு முழுவதும் சுற்றியிருக்கிறார். 102 டிகிரி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், குழந்தையை மீட்டோம். நீண்ட நேரமாக குழந்தைக்கு சரியாக உணவு வழங்கப்படவில்லை. அந்தப் பெண் மீது வழக்குபதியப்பட்டிருக்கிறது. சிசிடிவி-யின் உதவியுடன் அந்தப் பெண்ணை நாங்கள் கைதுசெய்திருக்கிறோம்” என்றனர்.
Discussion about this post