மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும், பொறியியல் படிப்புக்கான ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வுகள் நடத்த வெளியிடப்பட்டிருந்த கால அட்டவணையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி 11 மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இது குறித்தான வழக்கில் நீதிமன்றம், “மாணவர்களின் வாழ்க்கையை நிச்சயமற்றத் தன்மைக்கு உட்படுத்த முடியாது” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
“வாழ்க்கை என்பது நிற்காது. அனைத்துவிதப் பாதுகாப்பையும் உறுதி செய்துவிட்டு நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். மாணவர்கள் ஒரு முழு ஆண்டையும் வீணாக்கத் தயாராக இருக்கிறார்களா? கல்வி மீண்டும் செயல்பட வேண்டும். இன்னும் ஓராண்டுக்குக் கூட கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கலாம். அதனால், அந்த ஓராண்டுக்கும் பொறுத்திருக்க முடியுமா? இப்போது தேர்வு அட்டவணையில் மாற்றம் ஏற்படுத்துவதனால் நாட்டுக்கும், மாணவர்களுக்கும் எவ்வளவு இழப்பு ஏற்படும் தெரியுமா?” என்று நீதிபதி அருண் மிஸ்ரா வழக்கு விசாரணையின் போது அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். 3 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.
வழக்கறிஞர் அலாக் அலோக் ஸ்ரீவஸ்தவா, மாணவர்கள் தரப்பில் ஆஜராகி வாதாடியபோது, “நீதிமன்றத்திடமிருந்து நிவாரணத்தை எதிர்பார்க்கின்றனர் மாணவர்கள்” என்றார்.
Discussion about this post