10 சதவிகித இடஒதுக்கீட்டை நிராகரிப்பதாக அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “முன்னேறிய சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 103-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் எனப்படுவது – இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் சமூகநீதித் தத்துவத்துக்கு முரணானது என்பதாலும், உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளுக்கு எதிராக இருப்பதாலும், ஏழைகளில் சாதிப் பிரிவினையைக் கற்பித்துப் பாகுபாடு காட்டுவதாக இருப்பதாலும், நாங்கள் அதனை நிராகரிக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்போது, தமிழ்நாடு அரசும் உரிய முறையில் சமூகநீதியினையும், சமத்துவத்தையும் நிலைநாட்டிடும் வகையில் தனது கருத்துகளை வலுவாகப் பதிவு செய்ய வேண்டும் என்றும், “ஏழை, எளிய, நலிந்த மக்களுக்கு அவர்களது வறுமையைப் போக்கும், பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் அனைத்தையும் ஆதரிக்கும் நாங்கள், சமூகநீதித் தத்துவத்தின் உண்மை விழுமியங்களைச் சிதைக்க அனுமதிக்க மாட்டோம்.
சமூகநீதித் தத்துவத்தைக் காக்கத் தமிழ்நாட்டிலிருந்து முன்னெடுக்கப்படும் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க உதவிகரமாக இருக்கும்” என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post