தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை நீடித்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
அதிகமாக மழைபெய்திருக்கும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஆவடியில் 17 செ.மீ. மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
சென்னையைப் பொறுத்தவரை நேற்று இரவு முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை பெய்தது. எனினும் பெரும்பாலான முக்கியச் சாலைகளில் மழைநீர் தேங்கவில்லை. அதே நேரத்தில் குறுக்குச் சாலைகள், சந்துகள் போன்றவற்றில் முழங்கால் அளவுவரை மழைநீர் தேங்கியிருக்கிறது.
புதுப்பேட்டையின் முக்கியச் சாலைகளில் நீர் தேங்கவில்லை என்றாலும் பக்கச் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நீர் தேங்கியிருக்கிறது.
சென்னை முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் மழையால் மரங்கள் சாய்ந்தன. அவை இயந்திரங்கள் மூலம் அறுத்து அகற்றப்பட்டு வருகின்றன.
குமரி மாவட்டத்தில் வெள்ள எச்சரிக்கை
குமரி மாவட்டத்தில் மலையோரபகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனையடுத்து மாவட்டத்தின் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை,பெருஞ்சாணி ,சிற்றார் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணபடுகிறது.48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 589 கன அடி நீர் வந்துகொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் 42அடியை எட்டியது. இதனால் அணையிலிருந்து 500கன அடி தண்ணீர் திறந்துவிடபட்டுவருகிறது. இந்நிலையில் மற்றொரு அணையான பெருஞ்சாணி அணையில் வினாடிக்கு 740கன அடி தண்ணீர் வந்துகொட்டிருப்பதால் 77அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 73அடியை எட்டியுள்ளது. இதனையடுத்து அணையிலிருந்து 1000கன அடி தண்ணீர் திறந்துவிடபட்டது. இதனால் பரளியாறு தாமிரபரணியாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடபட்டடுள்ளது. மேலும் ஆறுகளில் அதிகளவில் வெள்ளம் வருவதால் பாதுகாப்பு கருதி ஆறுகளில் குளிக்க வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது
Discussion about this post