உலகின் முன்னணி தொழிலதிபர்களுள் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்தியுள்ளார். எலான் மஸ்க் கைக்கு ட்விட்டர் நிறுவனம் சென்ற நிலையில், அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி(CEO), தலைமை நிதி அதிகாரி (CFO) தலைமை சட்ட அதிகாரி(CLO) உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
உலகின் முன்னணி பணக்காரரான தொழிலதிபர் எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரை முழுமையாக வாங்குவதாக அறிவித்தார். நிறுவனத்துடன் நடத்திய டீலில் அந்நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதாக அவர் அறிவித்தார். இந்திய ரூபாயின் மதிப்பின் படி இந்த தொகை மூன்று லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயாகும்.
ஒப்பந்தம் போட்ட சில வாரங்களில் அதில் இருந்து வெளியேறுவதாக கூறிய மஸ்க், தற்போது தன்முடிவை மாற்றிக்கொண்டு ட்விட்டரை முழுமையாக வாங்கி கையகப்படுத்தியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதை குறிக்கும் விதமாக நேற்று அவர் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டரின் தலைமையகத்திற்கு கை கழுவப் பயன்படுத்தும் தொட்டியுடன் சென்ற வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், தலைமை அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தற்போது எலான் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் விதமாக ட்விட்டரின் முழு கட்டுப்பாட்டை பெற்றுள்ளார். தனது ட்விட்டர் கணக்கின் பயோவை ‘Chief Twit’ என மாற்றியுள்ள அவர், வந்த முதல் நாளிலேயே நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னணி தலைகளை அதிரடியாக வெளியேற்றியுள்ளார்.
அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பிராக் அகர்வால்(CEO), தலைமை நிதி அதிகாரி (CFO) நெட் செகல், தலைமை சட்ட அதிகாரி விஜாய கட்டே உள்ளிட்டோரை நிறுவனத்தை விட்டு வெளியேற்றியுள்ளார் எலான். மேலும் பல அதிரடி மாற்றங்களை ட்விட்டரில் எலான் மஸ்க் கொண்டுவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post