கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்து காதலர்களான மகேந்திரன் மற்றும் தீபாவிற்கு சென்னையில் இன்று காலை திருமணம் நடைபெற்றது. தம்பதி இருவருக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் கோயிலில் திருமணம் நடைபெற்றது. அமைச்சர் தாலி எடுத்து கொடுக்க கெட்டிமேளம் முழங்க, மணமகன் மகேந்திரன் மணப்பெண் தீபாவுக்கு தாலி கட்டினார். அங்கு குழுமியிருந்தவர்கள் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினர்.
மனநல சிகிச்சைக்காக இரண்டு ஆண்டுகள் முன்பு சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பக்கத்தை நாடிய சென்னையை சேர்ந்த 42 வயதான மகேந்திரன் மற்றும் வேலூரை சேர்ந்த36 வயதான தீபா இந்த காப்பகத்திலேயே சந்தித்து பழகி காதல் செய்து, தற்போது தம்பதியாகியுள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட பதற்றத்தின் மூலம் மகேந்திரனுக்கு Bipolar Affective Disorder ஏற்பட்டது. தந்தை இறந்த சோகத்தை தாள முடியாத தீபாவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக உள்நோயாளிகளாக இருந்த இருவரும் மருத்துவமனையிலேயே சந்தித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஒருவரையொருவர் அரவணைத்து பாசமுடன் வாழ்க்கையை துவங்கவுள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய மகேந்திரன், தீபாவை முதன்முறையாக பார்த்த போது எனது அம்மா மாதிரி இருந்தது என்றும், எனது அம்மா ஒரு ஆசிரியர் தான், பழகிய பிறகு தான் தெரியும் தீபாவும் ஒரு ஆசிரியர் என்று. இதனால் எனது வாழ்க்கையில் உள்ள அனைத்து உறவும் அவரின் உருவில் கிடைத்தது போல தோன்றுகிறது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
Discussion about this post