செங்கல்பட்டு :
செங்கல்பட்டு அருகே, மயானத்தில் புதைக்கப்பட்ட வீட்டுக்கு மூத்த மகளான சிறுமியின் தலையை யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் துண்டித்து எடுத்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த சித்திரவாடி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மகள் கிருத்திகா (12). இவர், அங்குள்ள அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 5-ம் தேதி வீட்டின் எதிரே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, தெரு விளக்கு மாற்றுவதற்காக மின் ஊழியர் கலைச்செல்வன் (20) மின் கம்பத்தின் மீது ஏறினார்.
அப்போது, சேதம் அடைந்திருந்த மின்கம்பம் முறிந்து, அங்கு விளையாடிக் கொண்டிருந்த கிருத்திகா மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த சிறுமி கிருத்திகா சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 14-ம் தேதி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் சித்திரவாடி மயானத்தில் புதைக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று காலை மயானத்தின் வழியாகச் சென்ற கிராம மக்கள், கிருத்திகா உடல் புதைக்கப்பட்ட இடத்தில் எலுமிச்சம் பழம், மஞ்சள்தூள், குங்குமம், தலைமுடி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கிருத்திகாவின் பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்கள் இது குறித்து சித்தாமூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை டாக்டர்கள் முன்னிலையில் கிருத்திகா புதைக்கப்பட்ட இடத்தை தோண்டினர். அப்போது, கிருத்திகாவின் தலை துண்டித்து எடுத்துச் செல்லப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடலை மீட்ட போலீசார், மறு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் அமாவாசை மற்றும் சூரிய கிரகணம் என்பதாலும், கிருத்திகா வீட்டுக்கு மூத்த மகள் என்பதாலும் மாந்திரீகத்துக்காக மர்மநபர்கள் அவரது தலையை துண்டித்து எடுத்துச் சென்றார்களா, தலையை துண்டித்து எடுத்து சென்றவர்கள் யார்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Discussion about this post