கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கோவை தங்கம். பின்னர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தமாகா மாநில துணைத் தலைவராகவும் இருந்தார். 2021 சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமாகாவுக்கு வால்பாறை தொகுதி ஒதுக்க வேண்டும் என்று கோரினார். ஆனால், தமாகாவுக்கு ஒதுக்காமல் அதிமுகவே அந்த தொகுதியை தன்வசம் வைத்துக் கொண்டது. இதனால் கோவை தங்கம் கடும் அதிருப்தி அடைந்து தமாகாவில் இருந்து விலகினார்.
பின்னர், சுயேட்சையாக வால்பாறையில் களம் இறங்குவதாக அறிவித்தார். பின்னர் அந்த முடிவை கைவிட்டு சேலத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் கோவை தங்கம். திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகத்துக்காக பிரச்சாரம் செய்தார். 2016ல் எந்த வேட்பாளரிடம் தோற்றாரோ அதே வேட்பாளருக்காக கோவை தங்கம் பிரச்சாரம் செய்தது அப்பகுதியில் பேசுபொருளாக இருந்தது.
இந்நிலையில், வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம் உடல் நலக்குறைவு காரணமாக கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி கோவை தங்கம் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், ‘வால்பாறை சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் கோவை தங்கம் அவர்கள் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். கோவை தங்கம் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலங்களில் தனது தொகுதி மக்களின் நலனில் நாட்டம் கொண்டு செயல்பட்டு வந்தார்
மாற்றுக் கட்சிகளில் இருந்தபோதும், கழகத்தில் இணைந்த பின்பும் என எப்போதுமே அவர் என் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்டிருந்தவர் ஆவார். கோவை தங்கம் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்
Discussion about this post