ஆப்கன் தலைநகர் காபூலில் இயங்கும் ஒரு தனிப்பயிற்சி கல்வி மையத்தில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளதாக காபூல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நகரின் மேற்குப் பகுதியிலுள்ள தஷ்த்-இ-பார்ச்சி பகுதியிலுள்ள காஜ் கல்வி மையத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
மாணவர்கள் பயிற்சி பல்கலைக்கழக தேர்வில் அமர்ந்திருந்தபோது இது நடந்ததாக மையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்பகுதியில் வசிப்பவர்களில் பலர் ஹசாரா சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் முன்னரும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
காஜ் டியூஷன் சென்டர் என்பது ஆண், பெண் இருபாலருக்கும் கற்பிக்கும் ஒரு தனியார் பயிற்சி நிறுவனம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டின் பெரும்பாலான பெண்கள் படிக்கும் பள்ளிகள் மூடப்பட்டன. ஆனால் சில தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன.
குண்டுவெடிப்பின் பின்னணியில் தாங்கள் இருப்பதாக இதுவரை எந்தக் குழுவும் கூறவில்லை.
ஆனால், பெரும்பாலும் ஷியா முஸ்லீம்களான ஹசாராக்கள், சன்னி இஸ்லாமை கடைபிடிக்கும் இஸ்லாமிய அரசு (IS) தங்களை அழைத்துக்கொள்ளும் குழு, தாலிபன் ஆகிய இருவரிடமிருந்தும் நீண்டகாலமாக துன்புறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்.
பாதுகாப்புக் குழுக்கள் அந்த இடத்தில் களத்தில் இருப்பதாகவும் தாக்குதலைக் கண்டிப்பதாகவும் கூறியுள்ளார் தாலிபன் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர்
பொதுமக்களின் இலக்குகளைத் தாக்குதவது “எதிரிகளின் மனிதாபிமானமற்ற தன்மை, தார்மீக தரமின்மை ஆகியவற்றை காட்டுகிறது,” என்று அப்துல் நஃபி தாகூர் கூறினார்.
மேலும், நிலைத்தன்மையை மீட்டெடுக்க முயல்வதாக தாலிபன்கள் கூறுகின்றனர். இருப்பினும் ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தஷ்த்-இ-பார்ச்சி பகுதி தொடர்ச்சியான தாக்குல்கள் நடக்கூடிய இடமாக இருந்து வருகிறது. அத்தகைய தாக்குதல்களில் சிலவற்றில் பள்ளிகளும் மருத்துவமனைகளும் குறி வைக்கப்பட்டன.
கடந்த ஆண்டு, தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, தஷ்த்-இ-பார்ச்சியில் உள்ள பெண்கள் பள்ளி மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தபட்சம் 85 பேர் கொல்லப்பட்டனர். மாணவர்கள் உட்பட நூற்றக்கானோர் காயமடைந்தனர்.
Discussion about this post