அமெரிக்காவை சேர்ந்த கேத்தரின் லாங்கே என்ற ஐந்து வயது சிறுமி, அரிய வகை இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை காப்பாற்ற அமெரிக்க மருத்துவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரைச் சேர்ந்த இந்த குழந்தை, பிறக்கும்போதே பாதி இதயத்துடன் பிறந்தது. இப்போது முதல், சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட பல உபாதைகளை அக்குழந்தை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக, பல அறுவை சிகிச்சைகளை அந்த பிஞ்சு உடல் எதிர்கொண்டது.
இது குறித்து குழந்தையின் பெற்றோர் கூறுகையில், “கேத்தரின் 20 வார கருவாக வயிற்றினில் இருக்கும்பொழுது இதனைப் பற்றி எங்களுக்குத் தெரிய வந்தது. ஆனால் அப்போது அதன் தீவிரம் புரியவில்லை. பிறகு அவள் பிறந்து நான்கு நாள்களில் ஒரு அறுவை சிகிச்சையும், நான்கு மாதங்களில் ஒரு அறுவை சிகிச்சையும், இரண்டரை வயதில் ஒரு அறுவை சிகிச்சையும் என இதுவரை மூன்று அறுவை சிகிச்சைகளை செய்துள்ளோம்.
கடந்த 12 மாதங்களில் மட்டும் 40 முறைக்கும் மேல், அவள் உடலிலிருந்து, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இப்போது அவள் அடுத்த அறுவை சிகிச்சைக்குத் தயாராகி வருகிறாள். இதயக் கோளாறு தவிர சிறுமிக்கு கல்லீரல் கசிவு நோயும் உள்ளது.
மருத்துவம் மட்டுமே சிறுமியை மீட்டுத் தரும் என்ற முழு நம்பிக்கையில் இருக்கிறோம். இந்த அறுவை சிகிச்சையும் தோல்வியுற்றால் அவளது உயிரை காப்பாற்ற நேரடி இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யவும் தயாராக இருக்கிறோம்” என்கின்றனர்.
Discussion about this post