சென்னை:
டெல்லிக்கு 3 நாள் பயணமாக சென்ற எடப்பாடி பழனிசாமியிடம், உள்கட்சி விவகாரங்கள் குறித்து எதுவும் என்னிடம் பேசக்கூடாது என்று அமித்ஷா நிபந்தனை விதித்ததால், அதிர்ச்சி அடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். அதேநேரத்தில் மோடியும் சந்திக்க மறுத்ததால், பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு நேற்று மாலை கோவை திரும்பினார். அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வமும் சந்திப்புக்கு அனுமதி கேட்டு காத்திருக்கிறார். இதனால் அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் முடிவுக்கு வர முடியாத நிலை உருவாகியுள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட பின், தங்களது கூட்டணி கட்சியில் உள்ள பாஜ டெல்லி தலைவர்களை சந்திக்க எடப்பாடி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். குறிப்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க கடந்த இரண்டு மாதங்களாக முயற்சி செய்தார். பிரதமர் சென்னை வந்தபோதும் சரி, எடப்பாடி டெல்லி சென்றிருந்தபோதும் பிரதமர் மோடி அவரை சந்திக்க மறுத்து விட்டார். அதேநேரம் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான தொழிலதிபர்கள், கான்ட்ராக்டர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறது.
இதில் பல கோடி ரூபாய் பணம், சொத்து ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவங்களால் எடப்பாடிக்கு தொடர்ந்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பெங்களூரில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் எடப்பாடியின் உறவினர் சந்திரகாந்த் ராமலிங்கம் மீது லோக்ஆயுக்தா போலீசார் கடந்த 3 நாட்களுக்கு முன் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்களால் விரக்தி அடைந்த எடப்பாடி, பாஜ தலைவர்கள் தனக்கு உதவி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார். ஆனால் பிரதமர் மோடி மற்றும் உயர்மட்ட தலைவர்கள் எடப்பாடியை சந்திக்க தொடர்ந்து மறுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், பாஜவின் மூத்த தலைவர் பியூஸ்கோயலை கடந்த 10 நாட்களுக்கு முன் எடப்பாடியின் தீவிர ஆதரவாளர்களான தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் டெல்லியில் சந்தித்து பேசினர். எப்படியாவது, எடப்பாடி பழனிசாமியை மோடி, அமித்ஷாவை சந்திக்க வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது, சென்னையில் இருந்து நீங்கள் அனுமதி கேட்டால் எப்படி. டெல்லிக்கு வந்து கோரிக்கை வைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு திடீரென சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.
நேற்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று பியூஸ்கோயல் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட, உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று காலை 11 மணிக்கு டெல்லியில் நார்த் பிளாக்கில் உள்ள தனது அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் ஒதுக்கினார். அதன்படி, எடப்பாடியும் உள்துறை செயலாளர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நடைபெற்றது. அப்போது, ‘வருமான வரிதுறை மூலம் தனது உறவினர்கள், நண்பர்கள் மீது தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
அதனால் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரி துறையினரிடம் பேசி தனக்கு எந்த தொந்தரவும் வரக்கூடாது. அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு விட்டார். அதிமுக தனது (எடப்பாடி) கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார். கடந்த தேர்தலில் அளித்த அதே ஒத்துழைப்பை தொடர்ந்து பாஜவுக்கு அளிக்க தயாராக உள்ளோம். அதனால், கூட்டணி தொடர்பாக தன்னிடம் மட்டுமே டெல்லி பாஜ தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பேசுவதற்காக திட்டமிட்டு அதற்கான முன்னேற்பாடுகளுடன் சென்றார்.
ஆனால் வந்தவுடன் உங்கள் உள்கட்சி விவகாரம் குறித்தோ, அரசியல் நிலவரம் குறித்தோ எதுவும் பேசக் கூடாது என்று அமித்ஷா அதிரடியாக கூறிவிட்டார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் எடப்பாடியும் அவர்களுடன் சென்ற 2 மாஜி அமைச்சர்களும் திகைத்தனர். அதன்பின்னர், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்திடம் வைக்க வேண்டிய கோரிக்கையை அமித்ஷாவிடம் எடப்பாடி வைத்து விட்டு திரும்பி விட்டார். அதிமுக விவகாரம் எதையும் அவரிடம் பேச முடியவில்லை.
இதனால், அதிருப்தியில் அமித்ஷா அறையில் இருந்து எடப்பாடி தரப்பினர் வெளியில் வந்தனர். பின்னர், பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் பிரதமர் அலுவலகமும் கை விரித்து விட்டது. இதனால், எடப்பாடி பழனிசாமிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலையே கோவைக்கு திரும்பி விட்டார். பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்குச் சென்று விட்டார். எடப்பாடியின் பயணம் தோல்வியில் முடிந்ததால், அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.
அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமியுடன் டெல்லி சென்றுள்ள சி.வி.சண்முகம் மட்டும் வழக்கறிஞர்களுடன் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்று, அதிமுக தற்போது எடப்பாடியின் முழு கட்டுப்பாட்டில் வந்துள்ளது குறித்தும், நீதிமன்ற தீர்ப்பு குறித்தும் விரிவாக மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், அதிமுகவின் மற்றொரு தலைவரான ஓ.பன்னீர்செல்வம் தற்போது வாரணாசியில் உள்ளார். அவர் அங்கு இன்னும் 2 நாட்கள் தங்கி இருக்க திட்டமிட்டுள்ளார். இந்த இரண்டு நாட்களில் ஏதாவது ஒரு நாள், பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை அனுமதி கொடுக்கப்படவில்லை. இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட பின், டெல்லி பாஜக தலைவர்களை சந்திக்க எடப்பாடி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அவர் 2 மாதமாக முயன்றும், சென்னை வந்தபோதும் சரி, டெல்லி சென்றபோதும் மோடி சந்திக்க மறுத்துவிட்டார்.
Discussion about this post