Beer for sunflower oil:
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் காரணமாக ஐரோப்பா முழுவதும் சமையல் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பண்டமாற்று முறையை பற்றி நாம் வரலாற்றில் படித்திருக்கிறோம். நாணயங்கள் பெரிய அளவில் புழக்கத்தில் இல்லாத காலத்தில், அம்முறை முக்கிய பரிவர்த்தனை முறையாக இருந்தது. ஆனால் நாணயங்கள் பயன்பாடு அதிகரித்ததை அடுத்து பண்டமாற்று முறை மெதுமெதுவாக வழக்கத்தில் இருந்து மறைந்து போனது. இருப்பினும், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு முடிவுக்கு வராத நிலையில், அதன் காரணமாக ஐரோப்பா முழுவதும் சமையல் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இப்பொழுது நூதனமான பண்டமாற்று முறை மீண்டும் அங்கே நடைமுறைக்கும் வந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்திய நிலையில், அதன் தாக்கம் உலகம் முழுவதுமே பல வகையான பொருளாதார பாதிப்புகளை ஏற்பட்டுதியுள்ளது. இதற்கு காரணம் உலகில் பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெயில் 80 சதவிகிதம் உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் உற்பத்தியாவது தான். எனவே உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர் உலகம் முழுவதும் சூரியகாந்தி எண்ணெய் தட்டுப்பாடு மிக அதிகமாக காணப்படுகிறது. உக்ரைன்-ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள நெருக்கடி முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில் உலக நாடுகள் பல வகையான சிக்கல்களில் சிக்கித் தவிக்கின்றன.
இதற்கு ஐரோப்பிய நாடுகளும் விதிவிலக்கல்ல. உக்ரைன் போரினால், ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் சமையல் எண்ணெய் பற்றாக்குறை பெரிய அளவில் பாதித்துள்ளது.
சமையல் எண்ணெய் பற்றாக்குறை காரணமாக ஜெர்மன் நாட்டில், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வாடிக்கையாளர் வழக்கமாக வாங்கும் சமையல் எண்ணெயில் பாதி அளவை மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், பொது மக்கள் மட்டுமல்ல உணவகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த பற்றாக்குறை நிலையை சமாளிக்க, ஜெர்மனில் உள்ள முனிச் நகர மதுபான விடுதியான Giesinger Brewery பண்டமாற்று முறைக்கு திரும்பியுள்ளது. மதுபான கடையின் மேலாளர் எரிக் ஹாஃப்மேன் ராய்ட்டர்ஸ் டிவியிடம் கூறுகையில், “எண்ணெய் பெறுவது குதிரைக் கொம்பாகி விட்டது. வாரத்திற்கு 30 லிட்டர்கள் தேவைப்படும் இடத்தில், எங்களுக்கு 15 லிட்டர் மட்டுமே கிடைக்கிறது. இதனால் எங்களுக்கு பொரித்த உணவுகளை தயாரிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது ” என்று கூறினார்.
எனவே, அவர்கள் புதுமையான அறிவிப்பை வெளியிட்டார்கள். மது பான கடை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பீர் அருந்த வரும் நபர் பதிலாக ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய்யை கொடுத்து ஒரு லிட்டர் பீரை வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. அதாவது எண்ணெய்க்கு பதிலாக பீர் வழங்கும் திட்டம். எந்த அளவு எண்ணெய் கொடுக்கிறார்களோ அதே அளவு பீர் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது வரை பீருக்கு மாற்றாக சுமார் 400 லிட்டர் எண்ணெய் கிடைத்துள்ளதாக பார் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
Discussion about this post