செப்டம்பர் 15, 1909
காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரத்தில், நடராஜன் முதலியார் – பங்காரு அம்மாள் தம்பதிக்கு மகனாக, 1909ல், இதே நாளில் பிறந்தவர் சி.என்.அண்ணாதுரை.
பொருளியல், அரசியலில் முதுகலை பட்டம் பெற்ற இவர், தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். பள்ளி ஆசிரியராக பணியை துவங்கினார். ஈ.வெ.ரா.,வை சந்தித்த பின், நீதிக்கட்சியில் இணைந்து, தி.க.,விலும் தொடர்ந்தார். ஈ.வெ.ரா.,வின் பத்திரிகைகளில் ஆசிரியர் பொறுப்பேற்று, ‘தம்பி…’ என, தொண்டர்களுக்கு எழுதினார். இதனால், ‘அண்ணா’ ஆனார். நாட்டின் சுதந்திரத்துக்கு எதிர்ப்பு, மணியம்மை யுடன் திருமணம் உள்ளிட்டவற்றால், ஈ.வெ.ரா.,வுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தி.மு.க.,வை துவக்கினார்.இவர், மாணவர்களுடன் இணைந்து நடத்திய ஹிந்தி எதிர்ப்பு, குலக்கல்வி எதிர்ப்பு போராட்டங்கள் வெற்றி பெற்றன. எதிர்க்கட்சி தலைவர், ராஜ்யசபா எம்.பி., பதவிகளை வகித்த இவர், 1967 சட்டசபை தேர்தலில் வென்று முதல்வரானார்.
இவரின் ஆட்சியில், இரு மொழி கொள்கை, சுயமரியாதை திருமண அங்கீகாரம், தமிழ்நாடு பெயர் மாற்றம் உள்ளிட்டவை நிறைவேறின. முதிர்ந்த பண்பாளரான இவர், 1969 பிப்ரவரி 3ல், தன், 59வது வயதில் புற்றுநோயால் இறந்தார்.கதாசிரியர், நடிகர், அரசியல்வாதி, சீர்திருத்தவாதியான அண்ணாதுரையின் பிறந்த தினம் இன்று!
Discussion about this post