அமெரிக்க ஸ்டார்ட்அப் ஆர்பிட் ஃபேப், 2025 ஆம் ஆண்டு, பூமியைச் சுற்றியுள்ள புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களுக்கு எரிபொருள் நிரப்பும் சேவையை அமைக்க திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், 1,000 க்கும் மேற்பட்ட புதிய செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் பொறுத்தப்படுகின்றன, முக்கியமாக தொலைத்தொடர்பு துறையில் சேவைக்காக அதிகமான செயற்கைகோள்கள் அனுப்பப்படுகின்றன.
விண்வெளியில் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் காலப்போக்கில் வழக்கற்றுப் போய்விட்டன. ஒரு சில செயற்கை கோள்கள் எரிபொருள் தீர்ந்து செயல்பாடு இழக்கும் நிலையில் உள்ளது.இந்த செயற்கைக்கோள்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே அமெரிக்காவின் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று விண்வெளியில் ஒரு பிரத்யேக எரிபொருள் நிரப்பும் சேவைக்கான செயற்கைக்கோளை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இந்த செயற்கைகோளில் எரிபொருளாக நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜனை அடிப்படையாகக் கொண்ட ஹைட்ராசைன் எனும் ஒரு இரசாயன கலவை நிரப்பப்பட்டிருக்கும். இது நிறமற்ற திரவ வடிவத்தை கொண்டது.
ஆர்பிட் ஃபேப் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனர், ஜேம்ஸ் புல்டிட்யூட் கூறும்போது “எங்கள் தொழில்நுட்ப பாதையில் ஹைட்ராசின் போன்ற பாரம்பரிய இரசாயன உந்துசக்திகள், செனான் மற்றும் கிரிப்டன் போன்ற எலக்ட்ரிக் ப்ராபல்ஷன் எரிபொருள்கள் மற்றும் உயர் சோதனை பெராக்சைடு போன்ற ‘பசுமை’ உந்து சக்திகளையும் பயன்படுத்த உள்ளன” என்றார் .
இந்த செயற்கைகோளில் இருந்து மற்ற செயற்கை கோளுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு, பாரம்பரிய நிரப்பு வால்வோடு சேர்த்து, பிரத்யேக எரிபொருள் நிரப்பும்போர்ட்டுகளும் சேர்க்கப்படும். அதன்மூலம் ஈர்ப்பு விசை இல்லாத அண்டப்பகுதியிலும் சரியாக எரிபொருள் நிரப்ப முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்த விண்வெளி அடிப்படையிலான நிரப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் விலைகளைப் பொறுத்தவரை, 100 கிலோ வரை விண்வெளியில் டெலிவரி செய்ய சுமார் $20 மில்லியன் வரை ஆகும். பூமியை விட்டு வெளியே இந்த எரிபொருள் மாற்றம் நடப்பதால் இவ்வளவு செலவாகும் என்கின்றனர்.
ஆனால் இது ஒரு புத்தம் புதிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதை விட மிகவும் மலிவாக செயல்படுகிறது. அதே நேரத்தில் பழைய செயற்கைகோள்களே விண்வெளியில் இன்னும் அதிகமான நாட்கள் இருப்பதை உறுதி செய்கிறது. இதனால் புது புது மாசுபாட்டை அண்டத்தில் சேர்க்க வேண்டியதில்லை. இது 2025 இல் செயல்படுத்தப்பட உள்ளது.
Image Credits To: https://nara.getarchive.net/media/an-artists
Discussion about this post