ஜகார்டா:
இந்தோனேசியாவில் 31,000 ஆண்டுகளுக்கு முன்பே மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குரங்கில் இருந்து மெல்ல மெல்ல பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக மாறிய பிறகு, குகை உள்ளிட்ட இடங்களில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக தங்கினர். இவ்வாறு கூட்டமாக இருப்பதால் தொற்று நோய்கள் மனிதர்களை எளிதில் தாக்கின. இதில் கொத்து கொத்தாக ஆதிகால மனிதர்கள் செத்து மடிந்தனர்.
பின்னர், இதுபோன்ற நோய்களை தீர்க்கும் மருந்துகளை தன்னை சுற்றியிருந்த செடி, கொடிகளிலேயே இருப்பதை மனிதன் அறிந்து கொண்டான். தொடர்ந்து அதை வைத்து மருந்துகளையும் கண்டுபிடித்தான். இவ்வாறு நோயை தீர்க்கும் மருத்துவ முறைகள் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டது தான் மனிதக் குல வரலாற்றில் மிகப் பொன்னான நாளாக கருதப்படுகிறது.
ஆச்சரியத்தில் ஆழ்த்திய கண்டுபிடிப்பு :
அகழ்வாராய்ச்சியாளர்களின் கூற்றுபடி, 6,000 ஆண்டுகளுக்கு முன்புதான் முதன்முதலில் மனிதன் அறுவை சிகிச்சை செய்திருக்கிறான் என நம்பப்பட்டு வந்தது. ஆசியாவில் ஒரு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூட்டில் (6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு) அறுவை சிகிச்சை மூலமாக கை அகற்றப்பட்டிருப்பதை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அதைதான் நாமும் நம்பி வந்தோம். ஆனால் தற்போது இந்தோனேசியாவில் நடந்திருக்கும் அகழ்வாராய்ச்சி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
31,000 ஆண்டு பழமையான எலும்புக்கூடு இந்தோனேசியாவின் மழைக்காடு பிராந்தியமான போர்னியோவில் உள்ள குகையில் கடந்த சில மாதங்களாக ஆராய்ச்சியாளர்கள் அகழாய்வு மேற்கொண்டு வந்தனர். இதில் பல குகை ஓவியங்கள் கண்டறியப்பட்டன. இந்த சூழலில், கடந்த வாரம் அந்தக் குகையின் ஒரு பகுதியை தோண்டிய போது அதில் ஒரு மனித எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டது. மண்ணோடு மண்ணாக மிகவும் சிதிலமடைந்த நிலையில் அந்த எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
முதல் அறுவை சிகிச்சை :
சுமார் 31,000 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த எலும்புக் கூட்டில் இடது கால் பாத எலும்புகள் காணாமல் போய் இருந்தது. முதலில், ஏதேனும் விபத்து அல்லது சண்டையில் கால் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதினர். பின்னர் அதனை ஆய்வு செய்த போது, அந்த மனிதனின் இடது கால் பாதம் அறுவை சிகிச்சை முறையில் வெற்றிகரமாக அகற்றப்பட்டிருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இது அவர்களை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது
குழந்தையாக இருந்தபோத சிகிச்சை?
இதுகுறித்து அகழ்வாராய்ச்சியாளர் டிம் மலோனி கூறியதாவது: அந்த மனிதனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது மட்டும் ஆச்சரியம் அல்ல. அந்த மனிதன் குழந்தையாக இருந்த போதே இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. முதலை போன்ற ஏதேனும் விலங்குகள் கடித்ததை அடுத்து, இந்த அறுவை சிகிச்சையை செய்துள்ளனர். ஸ்கேன், எக்ஸ் ரே போன்றவை இல்லாமலேயே மிக மிக துல்லியமாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் வரை அவர் உயிருடன் இருந்திருக்கிறார்.
பின்னர் தனது 20 வயது சமயத்தில் அவர் இறந்திருக்கிறார். அவர் எப்படி இறந்தார் எனத் தெரியவில்லை. இன்றைய மருத்துவத்தில் அறுவை சிகிச்சை செய்யும் போது மயக்க மருந்து, ரத்தப் போக்கை கட்டுப்படுத்தும் மருந்து ஆகியவை இருக்கின்றன. ஆனால், 31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இந்த அறுவை சிகிச்சையை செய்தார்கள் என்று நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. இவ்வாறு டிம் மலோனி கூறினார்.
Discussion about this post