இஸ்லாமபாத்:
பாகிஸ்தானின் கனமழையால் கிராமம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அங்குள்ள முஸ்லிம் மக்கள் பலரும் இந்து கோவிலில் தங்கியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் பெய்ய தொடங்கிய பருவமழை தொடர்ந்து இன்னும் விடாமல் பெய்து வருகிறது.
பாகிஸ்தானில் கனமழை குறிப்பாக ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்ததால் ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் பாகிஸ்தானில் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. கால்நடைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இவ்வாறாக மழைக்கு பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது..
கிராமமே தண்ணீரில் மூழ்கியது :
பாகிஸ்தானின் கச்சி மாவட்டத்தில் ஜலால் கான் என்ற கிராமம் உள்ளது. இங்கு அதிகளவில் முஸ்லிம் மக்களே வசித்து வருகின்றனர். இந்த கிராமம் அருகே செல்லும் நாரி, போலன் மற்றும் லெஹ்ரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக இந்த கிராமம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள மக்கள் செய்வதறியாது தவித்தனர். 3 ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அந்த கிராமம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது.
தங்க இடமின்றி தவிப்பு :
இதனால் அங்கு வசித்து வரும் 300க்கும் மேற்பட்ட மக்கள் தங்குவதற்கு இடமின்றி தவித்தனர். ஊரில் உள்ள அனைத்து இடங்களும் தண்ணீரில் மூழ்கியதாலும், சுற்றிலும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் தேங்கியதால் அந்த கிராம மக்கள் தங்க இடமின்றி தவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த ஊரின் அருகே உயரமான நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பாபா மதோதாஸ் என்ற இந்து கோவில் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் இருந்தது. காங்கிரீட் கட்டிடமான அந்த கோவில் உயரமான நிலப்பரப்பில் அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்து கோவிலில் முஸ்லிம் மக்கள் :
இதனால் அந்த கோவில் மட்டும் வெள்ளத்தில் மூழ்காமல் இருந்துள்ளது. அந்த கோவிலில் இருப்பவர்கள், கிராமத்தில் தங்க இடமின்றி தவித்த மக்களை தங்குவதற்காக கோவிலை திறந்து வைத்து அவர்களை அழைத்தனர். அதன்பேரில் முஸ்லிம் மக்களும் அந்த கோவிலில் தற்போது தங்கியுள்ளனர் என்று டான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Discussion about this post